குளிர்பானத்தில் மயக்க மருந்து; 10 பவுன் நகை, ரூ.5 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்த மர்ம ஆசாமி!

குளிர்பானத்தில் மயக்க மருந்து; 10 பவுன் நகை, ரூ.5 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்த மர்ம ஆசாமி!

தர்மபுரி அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து தங்க நகைகள், பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாப்பாரப்பட்டி அருகே ஆலமரத்துப்பட்டி கிராமத்தை  சேர்ந்த சின்னகண்ணு (70) என்ற மூதாட்டியின் மூன்று பிள்ளைகளும் வேறு வேறு இடங்களில் இருப்பதால் இவர்  தனியே  வசித்து வருகிறார். இந்நிலையில் உறவினர் என்று சொல்லிக் கொண்டு அவரை பார்க்க அடையாளம் தெரியாத நபர் வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்த அவர், மூதாட்டி அணிந்திருந்த பத்து சவரன் தங்கநகை, ஐந்து லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றார். இதனையடுத்து மூதாட்டி வீட்டில் மயங்கிக் கிடப்பது அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு தெரியவந்தது.

அவர்கள் மூதாட்டியை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் அவரது மகன் காவல்துறையிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருட்டு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பத்து நாட்களுக்கு முன்பு பாப்பாரப்பட்டியில் அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவரது வீட்டில், தனியாக இருந்த மூதாட்டை  மயக்க மருந்து கலந்த ஆப்பிளை சாப்பிட வைத்து, பெண் ஒருவர் தங்க நகைகளை அள்ளிச்சென்றார்.

இந்நிலையில், அதே போன்று தனியாக வசித்து வரும் மூதாட்டியை நோட்டமிட்டு மயக்க மருந்து கலந்த உணவு கொடுத்து மீண்டும் ஒரு சம்பவம் நடத்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in