ஆளுநரால் மாற்றப்பட்டதா பட்டமளிப்பு விழா?... அண்ணா பல்கலையில் பொதுக்கணக்கு குழு திடீர் ஆய்வு
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினர் திடீரென ஆய்வு நடத்தினர்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா கடந்த 6-ம் தேதி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கௌரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் சட்டமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவை பொதுக் கணக்குக்குழு தலைவருமான செல்வப்பெருந்தகை தலைமையிலான 20 உறுப்பினர்கள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் இன்று காலை முதல் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்காக தமிழக அரசு கலைவாணர் அரங்கத்தை ஒதுக்கீடு செய்ததாகவும், ஆளுநர் ரவி அங்கு வர மறுப்பு தெரிவித்ததுடன் அரசு அனுமதியின்றி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பட்டமளிப்பு விழாவை நடத்துமாறு உத்தரவிட்டதன் பேரில் விழா அங்கு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன் காரணமாக சட்டப்பேரவை பொதுக் கணக்குக்குழு தலைவர் செல்வம் பெருந்தகை தலைமையிலான உறுப்பினர்கள் ஆய்வு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.