'மாநில உரிமைகளுக்கு எதிரானது; நீட் தேர்வு தேவையில்லை': மாணவர்களிடையே முழங்கிய தவெக தலைவர் விஜய்

விழாவில் பேசிய நடிகர் விஜய்
விழாவில் பேசிய நடிகர் விஜய்
Updated on
2 min read

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது, அந்த தேர்வு தேவையில்லை என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் விருதுகள், ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இன்று இரண்டாம் கட்ட விருது, ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் தவெக தலைவர் நடிகர் விஜய் பேசியதாவது:

"நீட் தேர்வால் தமிழ்நாட்டு மாணவ, மாணவிகள்... குறிப்பாக கிராமப் புறத்தைச் சேர்ந் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே சத்தியமான உண்மை.

விழாவில் பங்கேற்ற மாணவர்கள், பெற்றோர்.
விழாவில் பங்கேற்ற மாணவர்கள், பெற்றோர்.

நீட் தேர்வை 3 பிரச்சினைகளாக நான் பார்க்கிறேன். ஒன்று- இந்த நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது. 1975-க்கு முன்பு கல்வி மாநிலப் பட்டியலில் தான் இருந்தது. அதன் பிறகு அதை பொதுப்பட்டியலில் சேர்த்தனர். அப்போதுதான் முதல் பிரச்சினை தொடங்கியது.

இரண்டாவது- ஒரே நாடு, ஒரே பாடத்திட்டங்கள், ஒரே தேர்வு... இது கல்வி கற்கும் நோக்கத்திற்கே எதிரான விஷயம். பாடத்திட்டங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்.

பன்முகத்தன்மை பலமே தவிர பலவீனம் அல்ல. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு, என்சிஇஆர்டி-பாடத்திட்டத்தில் தேர்வு வைத்தால் அதை எப்படி? கிராமப்புற மாணவ மாணவிகள், குறிப்பாக மருத்துவ படிப்பில் இது அவர்களுக்கு எவ்வளவு சிரமமான விஷயம் என்பதை யோசித்து பார்க்க வேண்டும்.

மாணவ, மாணவிகளுக்கு விருது, சான்றிதழ் வழங்கிய விஜய்
மாணவ, மாணவிகளுக்கு விருது, சான்றிதழ் வழங்கிய விஜய்

மூன்றாவதாக நான் பார்க்கும் பிரச்சினை- கடந்த மே 5ம் தேதி நடந்த நீட் தேர்வில் குளறுபடிகள் நடந்ததை நாம் செய்திகளில் பார்த்தோம். இதன் காரணமாக நீட் தேர்வு மீது உள்ள நம்பகத்தன்மையே மக்களுக்கு முற்றிலும் போய்விட்டது. இனி நாடு முழுவதும் நீட் தேர்வே தேவையில்லை என்பதே இந்த செய்திகள் மூலமாக நாம் புரிந்து கொண்ட விஷயம். இதற்கு நீட் விலக்குதான் உடனடி தீர்வு.

நீட் ரத்து கோரி, தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஒன்றிய அரசு விரைவில் இப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக கல்வியை பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

இதில் ஏதும் பிரச்சினைகள் இருந்தால் இடைக்கால தீர்வாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்தி, சிறப்பு பொதுப் பட்டியல்-ஐ உருவாக்கி, கல்வி, சுகாதாரத்தை அதில் சேர்க்க வேண்டும். தற்போதைய நிலையில் ஒன்றிய அரசின் கட்டிப்பாட்டிலேயே இதற்கான அதிகாரம் எல்லாம் உள்ளது. எனவே மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் தரப்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.”

இவ்வாறு நடிகர் விஜய் பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in