
மதுரைக்கு வந்த நெல்லை - சென்னை இடையேயான வந்தேபாரத் ரயில் முன்பு பயணிகள் செல்ஃபி புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.
நெல்லை- சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் வருகிற 24ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நேற்றைய தினம் தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் தலைமையில் குழுவினர் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். வரும் 24ம் தேதி நெல்லையில் இருந்து காலை 11.30 மணியளவில் சென்னைக்கு வந்தே பாரத் தனது பயணத்தை தொடங்குகிறது. இதற்கான தொடக்க விழா ஏற்பாடுகள் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த ரயில் 8 பெட்டிகள் கொண்டதாக உள்ளது. சுமார் 652 கிலோமீட்டர் தூர பயணத்தை வந்தே பாரத் ரயில் 7 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்றடைய உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி மற்றும் முக்கிய நிலையங்களில் நின்று செல்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சென்னையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த வந்தே பாரத் ரயில் நெல்லைக்கு செல்ல இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டது. பின்னர் அங்கிருந்து விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக வந்தே பாரத் ரயில் வந்து சென்றது. மதுரை ரயில் நிலையத்தில் 10 நிமிடம் வந்தே பாரத் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வந்தே பாரத் ரயில் முன்பாக ஏராளமான பொதுமக்கள் செல்ஃபி எடுத்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.