நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து போராட்டம்: மத்திய அமைச்சர் வீட்டிற்குள் மாணவர் அமைப்பினர் நுழைய முயன்றதால் பரபரப்பு

நீட் முறைகேட்டை கண்டித்து போராட்டம்
நீட் முறைகேட்டை கண்டித்து போராட்டம்

ஹைதராபாத்தில் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின் போது, மாணவர் அமைப்பினர், மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டியின் வீட்டிற்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ஆண்டு நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் காரணமாக நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பீகார், குஜராத், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கெனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்எஸ்யுஐ), இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்எப்ஐ), அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (ஏஐஎஸ்எப்) மற்றும் முற்போக்கு ஜனநாயக மாணவர் சங்கம் (பிடிஎஸ்யு) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மாணவர் சங்கத் தலைவர்கள் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து இன்று போராட்டம் நடத்தினர்.

அப்போது, என்எஸ்யுஐ ஹைதராபாத் மாவட்டத் தலைவர் அபிஜித் யாதவின் தலைமையில், ஒரு குழுவினர், அப்பகுதியில் உள்ள, நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் வீட்டிற்கு சென்று முழக்கங்களை எழுப்பியவாறே நுழைய முயன்றனர்.

அப்போது, இளநிலை நீட் தேர்வை தவறாக நிர்வகித்த தேசிய தேர்வு முகமை (என்டிஏ) கலைக்கப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

மத்திய அமைச்சர் வீட்டிற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள்
மத்திய அமைச்சர் வீட்டிற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள்

இதையடுத்து அங்கிருந்த, போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்களை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்களை காச்சிகுடா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in