மக்களவை சபாநாயகர் இருக்கையில் மீண்டும் அமர்கிறார் ஓம் பிர்லா... துணை சபாநாயகர் இருக்கையை நெருக்கும் எதிர்க்கட்சிகள்

மீண்டும் மக்களவை சபாநாயகராகும் ஓம்பிர்லா
மீண்டும் மக்களவை சபாநாயகராகும் ஓம்பிர்லா

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வாகிறார். அதற்கான அனைத்து வாய்ப்புகளும் கூடியுள்ள சூழலில், துணை சபாநாயகர் இருக்கைக்கு எதிர்க்கட்சியினர் குறிவைத்துள்ளனர்.

மக்களவை சபாநாயகர் இருக்கையில் எவரை அமர்த்துவது என்ற இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வருகிறது. அதன்படி மீண்டும் ஓம் பிர்லாவை அந்த பதவியில் அமர்த்த தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்துள்ளது. முந்தைய மோடி 2.0 ஆட்சிக்காலத்தில் சபாநாயகராக மக்களவையை வழிநடத்தியதில் ஓம் பிர்லாவின் பங்கு முக்கியமானது. சபாநாயகர் பதவிக்கு இந்தியா கூட்டணி சார்பில் எவரும் முன்னிறுத்தப்பட வாய்ப்பில்லை என்பதால் ஓம்பிர்லா போட்டியின்றி தேர்வாகிறார்.

மக்களவை
மக்களவை

2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களின் முடிவாக முறையே, சுமித்ரா மகாஜன் மற்றும் ஓம் பிர்லா ஆகியோர் மக்களவை சபாநாயகராக தேர்வாகி இருந்தனர். அப்போதைய பாஜகவின் தனிப்பெரும்பான்மை அதற்கான சாத்தியங்களை எளிமையாக்கியது. ஆனால் இம்முறை தனிப்பெரும்பான்மையை பாஜக தவறவிட்டதில் கூட்டணி கட்சிகளின் உதவியை சகலத்திலும் எதிர்பார்க்கும் சூழல் எழுந்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் இணக்கத்தைப் பெற அவர்களிடமும் பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். துணை சபாநாயகர் வாய்ப்பை தங்களுக்கு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மக்களவையின் மரபான நடைமுறைகளில் இதுவும் ஒன்று என்றபோதும், ஆளும் கட்சி - எதிர்க்கட்சி இடையே ஒருமித்த முடிவு எட்டப்படுவது அவசியம்.

மக்களவை சபாநாயகராகும் ஓம் பிர்லா
மக்களவை சபாநாயகராகும் ஓம் பிர்லா

மீண்டும் மக்களவை சபாநாயகராகும் ஓம் பிர்லா, கல்லூரிப்பருவம் தொட்டே மாணவர் தலைவராக பாஜகவில் செயலாற்றியவர். அவர் தற்போது ராஜஸ்தானில் உள்ள தனது ஆஸ்தான கோட்டா-பூண்டி தொகுதியில் இருந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக, அவர் ராஜஸ்தான் சட்டமன்றத்தில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி உள்ளார்.

ராஜஸ்தானில் இருந்து சபாநாயகர் இருக்கையில் ஆக்கிரமித்த முதல் எம்பி என்ற சாதனையை ஓம்பிர்லா படைத்துள்ளார். தற்போது எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி கூட்டணி கட்சிகளாலும் கடும் நெருக்கடிகளுக்கு பாஜக ஆட்சி ஆளாகியுள்ள இறுக்கமான சூழலில் மக்களவை சபாநாயகராக ஓம்பிர்லா மீண்டும் பொறுப்பேற்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in