
திருப்பதியில் வரும் 15-ம் தேதி முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள் நடத்தப்படுகின்றன. முன்னதாக கடந்த மாதம் 18-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசித்தனர்.
இந்நிலையில், நவராத்திரி பிரம்மோற்சவ விழா வரும் 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது. நவராத்திரி பிரம்மோற்சவத்துக்கு கொடியேற்றும், கொடி இறக்கும் மற்றும் தேர் திருவிழா நிகழ்வுகள் இல்லை. தங்கத் தேரோட்டம் மட்டுமே நடத்தப்படும்.
தற்போது புரட்டாசி மாதம் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிகின்றனர். இதனால் கடந்த இலவச தரிசன டிக்கெட்டை திருமலை தேவஸ்தானம் ரத்து செய்தது. இந்நிலையில், வரும் சனிக்கிழமைகளிலும் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, வரும் நாட்களில் சனிக்கிழமைகளிலும், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய தினங்களிலும் இலவச தரிசன டிக்கெட்டுகளை நிறுத்தி வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.