ஒடிசா அரசியலில் இருந்து ஓய்வை அறிவித்தார் வி.கே.பாண்டியன்... நவீன் பட்நாயக் படுதோல்விக்கான பழி தீருமா?

நவீன் பட்நாயக் உடன் வி.கே.பாண்டியன்
நவீன் பட்நாயக் உடன் வி.கே.பாண்டியன்

ஒடிசா மாநில அரசியலில் இருந்து தனது ஓய்வை அதிகாரபூர்வமாக இன்று அறிவித்திருக்கிறார் வி.கே.பாண்டியன்.

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களும் சேர்ந்தே நடைபெற்றன. மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையை இழந்த பாஜக, கூட்டணி கட்சிகளின் உதவியால் கரையேறி இருக்கிறது. ஆனால் ஆந்திராவில் பாஜகவின் கூட்டணியான தெலுங்கு தேசம் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று ஆட்சியமைக்கிறது. மேலும் ஒடிசாவில் நேரிடையாகவே பாஜக வென்றுள்ளது.

வி.கே.பாண்டியன்
வி.கே.பாண்டியன்

சுமார் கால்நூற்றாண்டு காலமாக ஒடிசாவை ஆண்டுவந்த பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சியை அகற்றி அங்கே முதல் முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது. பாஜகவை அயோத்தி ராமர் கைவிட்டபோதும், பூரி ஜெகநாதர் கைவிடவில்லை. இதையே, தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு மோடி பங்கேற்ற கட்சி நிர்வாகிகளுடனான கூட்டத்தில் ஜெய் ஸ்ரீராம் என்பதற்கு பதிலாக ஜெகநாதரை வணங்கி தனது உரையை ஆரம்பித்தார்.

தேர்தலுக்கு முன்பாக ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் பாஜகவுடன் இணக்கமான போக்கையே கொண்டிருந்தது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இணையாதும் போக்கு காட்டியது. இந்த வகையில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்துடன் இணைந்தே கூட்டணியாக செயல்பட பாஜக முன்வந்தது. ஆனால் நவீன் பட்நாயக்கின் உதவியாளரான வி.கே.பாண்டியனின் தலையீட்டால் அந்த ஏற்பாடு முறிந்ததாக பின்னர் பாஜக குற்றம்சாட்டியது. அதே வேகத்தில் வி.கே.பாண்டியனை குறிவைத்து பாஜக தீவிர பரப்புரையில் ஈடுபட்டது.

தமிழரான வி.கே.பாண்டியன் நவீன் பட் நாயக்கை தன் கைக்குள் போட்டுக்கொண்டு அடுத்த ஒடிசா முதல்வராக முயற்சிப்பதாக குற்றம்சாட்டியது. ஒடியா மண்ணை ஒரு தமிழர் ஆள முயற்சிப்பதா என்ற பாஜவின் முழக்கம் பெரிதாக வேலை செய்தது. இதன் பலனாக தேர்தல் முடிவுகள் வெளியானபோது பிஜு ஜனதா தளம் படு தோல்வியடைந்திருந்தது.

நவீன் பட்நாயக் உடன் வி.கே.பாண்டியன்
நவீன் பட்நாயக் உடன் வி.கே.பாண்டியன்

இதற்கு வி.கே.பாண்டியனே காரணம் என பாஜக மட்டுமன்றி பிஜு ஜனதா தளத்திலும் அதிருப்தி குரல்கள் எழுந்தன. இவற்றின் மத்தியில் வி.கே.பாண்டியன் தான் ஆக்டிவ் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்றைய தினம் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு வெளியே குடிமைப்பணி அதிகாரியாக சேவையாற்றச் சென்ற வி.கே.பாண்டியன் ஒடிசாவின் ஆட்சி மற்றும் கட்சியில் தலையெடுத்தது, பாஜகவின் தலையீட்டால் தற்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளது.

தனது அரசியல் ஓய்வு தொடர்பான அறிவிப்பில், “அரசியலில் சேர்வதான எனது நோக்கம் நவீன் பட்நாயக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே இருந்தது. ஆனால் இப்போது நான் தீவிர அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். இந்தப் பயணத்தில் யாரையாவது காயப்படுத்தியிருப்பின் மன்னிக்கவும். பிஜு ஜனதா தளத்துக்கான இழப்பில் எனக்கு எதிரான தேர்தல் பிரச்சாரத்துக்கு பங்கு இருந்திருப்பின் அதற்காக வருந்துகிறேன். பிஜு ஜனதா தளம் கட்சியினர் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று வி.கே.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in