கூட்டணி கட்சிகளின் நெருக்கடிக்கு மத்தியில் இன்று கூடுகிறது தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம்!

பிரதமர் மோடியுடன் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார்
பிரதமர் மோடியுடன் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இதில் கூட்டணி கட்சிகள் வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியாகின. இதில் மத்தியில் ஆளும் பாஜக உள்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 543 இடங்களில் பாஜகவின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளன.

மக்களவை தேர்தல் 2024
மக்களவை தேர்தல் 2024

இதில் பாஜக மட்டுமே 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. அதேநேரம், ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தெலுங்குதேசம் 16 தொகுதிகளையும், ஜனசேனா 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களையும், சிராக் பஸ்வானின் லோக் ஜனதா தளம் 5 இடங்களையும் வென்று கூட்டணிக்கான பெரும்பான்மையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மூன்றாம் முறையாக நரேந்திர மோடி பிரதமாக உள்ளார்.

இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணியின் மக்களவை தலைவராக பிரதமர் நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி
தேசிய ஜனநாயக கூட்டணி

இதனைத் தொடர்ந்து, எம்.பிக்களின் ஆதரவு கடிதத்துடன் குடியரசு தலைவரை சந்தித்து மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரக்கூடும். அதன்படி, வரும் 9- ம் தேதி நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, கூட்டணி கட்சிகளின் நிபந்தனைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாகவும் பாஜக தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இன்றே இதற்கான முடிவை எட்டவும் முனைப்பு காட்டி வருகிறது.

சந்திரபாபு நாயுடு 3 கேபினட் உட்பட 6 அமைச்சர் பதவிகள், ஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் மக்களவை சபாநாயகர் பதவி போன்ற நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் 3 கேபினட் உட்பட 5 அமைச்சர் பதவிகள், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து, மக்களவை சபாநாயகர் பதவி போன்றவற்றை கேட்பதாகவும் கூறப்படுகிறது.

மோடி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார்.
மோடி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார்.

இக்கூட்டணியில் உள்ள சிராக் பஸ்வான், எச்.டி.குமாரசுவாமி மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரும் சில நிபந்தனை முன்வைத்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக இன்று மாலைக்குள் பாஜக முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in