இன்று இலங்கை - தமிழ்நாடு இடையேயான கப்பல் போக்குவரத்து துவங்குகிறது... பயணிகளுக்கு சலுகை கட்டணம் அறிவிப்பு!

செரியாபாணி கப்பல்
செரியாபாணி கப்பல்

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்த அமாவாசை நாளான இன்று  பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்குகிறது.

கடந்த ஜூலை மாதம் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்திருந்தபோது  நாகப்பட்டினம் - இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை விரைவில் தொடங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். அதன்பிறகு நாகை - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து சேவைக்கான பணிகள் சூடுபிடித்தது.

மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழக அரசும் இணைந்து நாகை துறைமுகத்தை ஆழப்படுத்துவது, சுங்கத்துறை அலுவலகம், குடியுரிமை அலுவலகம், உடைமைகள் சோதனை அலுவலகம், பயணிகள் சோதனை அலுவலகம் போன்றவற்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. இந்த பணிகளை கடந்த ஆகஸ்ட் மாதம் ஆய்வு செய்த அமைச்சர் எ.வ. வேலு அக்டோபர் முதல் வாரத்தில் நாகை - இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கும் என்று அறிவித்தார்.

இந்நிலையில் நாகை - இலங்கை இடையே இயக்கப்பட உள்ள செரியாபாணி கப்பல் கொச்சி துறைமுகத்தில் இருந்து சோதனை ஓட்டத்திற்காக நாகை துறைமுகத்திற்கு கடந்த 7 ம் தேதி வருகை தந்தது. அந்த கப்பலுக்கு துறைமுக அதிகாரிகள் தேங்காய் உடைத்தும் சூடம் ஏற்றியும் மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 8 மற்றும் 9 ஆகிய இரண்டு தேதிகளிலும் செரியாபாணி கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. கடந்த 10 ம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கும் என முதலில்  அறிவிக்கப்பட்டது.  சில நிர்வாக காரணங்களால் கப்பல் போக்குவரத்து சேவை 12 ம் தேதி தொடங்கப்படும் என பின்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தேதிகளில் கப்பல் போக்குவரத்து  தொடங்கவில்லை.

இந்நிலையில் இன்று  முதல் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளது. நிறைந்த அமாவாசை, அதுவும் மகாளய அமாவாசை நாளான இன்று நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு செரியாபாணி கப்பல் தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை தொடங்க உள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கப்பல் போக்குவரத்து தொடங்கி வைக்கவுள்ளார். 

தொடக்க நாளான  இன்று பயணிக்க சிறப்பு கட்டண சலுகை  அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று  பயண கட்டணம் 3000 ரூபாய் மட்டும் தான் என்றும், இன்று பயணிக்க 35 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in