கத்தியால் கழுத்தை அறுத்து மகளைக் கொல்ல முயன்ற தாய்... அடுத்து செய்த ஷாக் சம்பவம்!

சம்பவம் நடைபெற்ற வீடு.
சம்பவம் நடைபெற்ற வீடு.

திருவனந்தபுரத்தில் உறங்கிக் கொண்டிருந்த மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயன்ற தாய், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றங்கரை தாலுகாவில் உள்ள அரக்குன்றத்தைச் சேர்ந்தவர் லீலா(77). இவரது மகள் பிந்து. இவர்கள் இருவரின் கணவர்களும் ஏற்கெனவே இறந்து விட்டனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் லீலாவின் மகன் உயிரிழந்தார். இதனால் உறவினர் வீட்டில் பிந்து, லீலா வசித்து வந்தனர்.

இந்த நிலையில், சம்பவ நாளான இன்று உறங்கிக் கொண்டிருந்த தனது மகள் பிந்துவின் கழுத்தை கத்தியால் லீலா அறுத்தார். இதனால் ரத்த வெள்ளத்தில் பிந்து மயங்கி விழுந்தார். இதனால் அவர் இறந்து விட்டதாக கருதிய லீலா, வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதனால் அவரது உடலில் தீப்பிடித்து எரிந்தது. அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது கழுத்து அறுபட்ட நிலையில் பிந்துவும், தீப்பிடித்து லீலாவும் எரிந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது லீலா உடல் கருகி உயிரிழந்து கிடந்தார். கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்த பிந்துவை மீட்டு நெய்யாற்றங்கரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லீலாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிந்துவின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

பணப்பிரச்சினையால் தவித்து வந்த லீலா மகளைக் கொலை செய்து விட்டு தற்கொலை செய்ய முயன்றதாக முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனாலும், இந்த சம்பவத்திற்கு அதுமட்டும் தான் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகளின் கழுத்தை அறுத்து விட்டு தாய் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in