உலகத் தலைவர்களை இந்திய கலாச்சாரப்படி வரவேற்ற இத்தாலி பிரதமர்... மோடி புது உற்சாகம்!

இத்தாலியில் மோடியை வரவேற்கும் மெலோனி
இத்தாலியில் மோடியை வரவேற்கும் மெலோனி

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலிக்கு வருகை தந்த பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி 'வணக்கம்' வைத்து வாழ்த்துடன் வரவேற்றார். சர்வதேச நிகழ்வில் வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் இந்திய கலாச்சாரத்தின் படி வரவேற்றவிதம் கவனம் பெற்றுள்ளது.

சோனியா காந்தி மற்றும் வாரிசுகளுக்கு எதிராக அவர்களின் இத்தாலிய பின்னணியை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சாடுவது உண்டு. ஆனால் அதே இத்தாலியின் பிரதமரான ஜார்ஜியா மெலோனி, மோடியின் அணுக்க நண்பராகவும், பாராட்டுக்கு உரியவராகவும் விளங்கி வருகிறார். இருவர் இடையிலான நட்பும், உபசரிப்பும் அத்தனை பிரசித்தி பெற்றது.

மோடி மெலோனி
மோடி மெலோனி

தற்போது மூன்றாம் முறையாக பிரதமர் பதவியில் அமர்ந்திருக்கும் மோடி தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக, ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்றுள்ளார். ஜூன்13-15 இடையே நடைபெறும் இந்த கூட்டத்தில் மீண்டும் பிரதமரான உற்சாகத்துடனும் மோடி இன்று பங்கேற்றுள்ளார். பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த முதல் ஐரோப்பிய தலைவர் இத்தாலிய பிரதமர் மெலோனி ஆவார். இந்த முறை இத்தாலிக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளை ஆழப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தினார்.

பிரதமர் மோடியும் மெலோனியும் பரஸ்பரம் நல்ல நண்பர்கள் என்று பாராட்டும்படி நல்லுறவைப் பகிர்ந்து கொள்கின்றனர். கடந்த டிசம்பரில் துபாயில் நடந்த ’சிஓபி28’ உச்சிமாநாட்டில் அவர்கள் சந்தித்தபோது அவர்களின் நட்பு மேலும் வெளிப்பட்டது. அங்கு மெலோனி மோடியுடன் வைரலான செல்ஃபியை வெளியிட்டார். அது முதல் மெலோனி-மோடியை இணைக்கும் #மெலடி என்பது சமூக ஊடகங்களில் வைரலானது. கடந்த செப்டம்பரில் டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின்போதும் அவர்களது நட்புறவு அடுத்தக்கட்டத்துக்கு சென்றது. தற்போது இந்திய கலாச்சாரப்படி, உலகத் தலைவர்களை இத்தாலி பிரதமர் வரவேற்கும் வகையில் இம்முறை வளர்ந்துள்ளது.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் இந்திய பிரதமர் மோடி
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் இந்திய பிரதமர் மோடி

ஜி7 உச்சிமாநாட்டின் போது இங்கிலாந்தின் ரிஷி சுனக், பிரான்சின் இம்மானுவேல் மேக்ரோன் மற்றும் உக்ரைனின் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருடன் மோடி கலந்துரையாடினார். தொடர்ந்து ’செயற்கை நுண்ணறிவு, ஆற்றல், ஆப்பிரிக்கா-மத்திய தரைக்கடல்’ என்ற தலைப்பிலான உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார். இதை இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தொகுத்து வழங்குகிறார். "உலகத் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களில் ஈடுபட ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று உற்சாகத்துடன் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி வளைய வருகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in