டெல்லியில் பரபரப்பு... சந்திரபாபு நாயுடுவை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

டெல்லியில் சந்திரபாபு நாயுடு, மு.க.ஸ்டாலின் சந்திப்பு
டெல்லியில் சந்திரபாபு நாயுடு, மு.க.ஸ்டாலின் சந்திப்பு

மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், டெல்லியில் ஆந்திர பிரதேச முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பாஜக, காங்கிரஸ்
பாஜக, காங்கிரஸ்

இதில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவிலான தனிப்பெருன்பான்மை கிடைக்கவில்லை. இதனால், கடந்த இரண்டு முறை போன்று அல்லாமல், பாஜக இந்த முறை ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளை நாட வேண்டியுள்ளது. அதுவும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமாரின் ஆதரவும் பாஜகவிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

டெல்லியில் சந்திரபாபு நாயுடு, மு.க.ஸ்டாலின் சந்திப்பு
டெல்லியில் சந்திரபாபு நாயுடு, மு.க.ஸ்டாலின் சந்திப்பு

இந்த நிலையில் ஆந்திர பிரதேச முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவை டெல்லி விமான நிலையத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசியது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நேற்று மாலை இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

இக்கூட்டம் முடிந்து திரும்பி வரும்போது டெல்லி விமான நிலையத்தில் ஆந்திர பிரதேச முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப்பக்கத்தில் “டெல்லி விமான நிலையத்தில், கருணாநிதியின் நீண்டகால நண்பரான சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்தேன். அவருக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு, சகோதர மாநிலங்களான தமிழ்நாடு - ஆந்திர பிரதேசம் இடையேயான நல்லுறவை வலுப்படுத்த இணைந்து செயல்படுவோம் என்ற என் நம்பிக்கையை வெளிப்படுத்தினேன்.

சந்திரபாபு நாயுடு ஒன்றிய அரசில் மிக முக்கியப் பங்காற்றுவார் என்றும், அவர் தென் மாநிலங்களுக்காக வாதாடி, நமது உரிமைகளைப் பாதுகாப்பார் என்றும் உறுதியாக நம்புகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு இந்தியாஅளவிலான அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in