குற்றவாளிகளை பாஜகவில் சேர்த்ததை தமிழிசையே ஒப்புக்கொண்டுள்ளார்... அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதி

குற்றவாளிகளை பாஜக சேர்த்து வருகிறது என்பதை திமுக தொடர்ந்து கூறி வருகிறது. அந்த குற்றச்சாட்டை தற்போது தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தனித்து வருவோம் என்று சொன்னவர்கள் இன்று தனித்து விடப்பட்டுள்ளார்கள், இன்று கூட்டணியின் தயவு இல்லாமல் அவர்கள் ஆட்சியை நடத்த முடியாது என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். நிச்சயமாக இது நிலைத்திருக்கக்கூடிய ஆட்சியாக இருக்காது என்பது அரசியல் வல்லுனர்களுடைய கருத்தாக அமைந்திருக்கிறது. இந்தியா கூட்டணிக்கு கிடைத்திருக்கிற வெற்றி என்பது மகத்தான வெற்றி. 400 இடங்களில் வெல்வோம் என்று சொன்னவர்கள் 234 இடங்களைத்தான் பெற்றுள்ளனர். ஆனால் எங்களது கூட்டணி சிறப்பாக எதிர்க்கட்சியாக பணியாற்றக்கூடிய அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அதனால் இந்தியா கூட்டணி இந்த வெற்றியைக் கொண்டாடுவதில் எந்த ஒரு தவறும் கிடையாது. அது மகிழ்ச்சியான ஒன்றுதான்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எங்களது தமிழ்நாடு முதலமைச்சர் 40க்கு 40 என்ற முழக்கத்தோடு தேர்தல் களத்தை ஆரம்பித்து 40க்கு 40 என்ற சபதத்தை தமிழ்நாட்டில் நாங்கள் நிறைவேற்றி உள்ளோம். எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளர். ஆனால் அந்தக் கட்சிக்குள் என்னென்ன நடக்கிறது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். நாங்கள் அதிமுகவை பற்றி விமர்சிக்கவில்லை. ஆனால் திமுகவை பற்றி பேசுவதற்கு எடப்பாடிக்கு என்ன தகுதி இருக்கிறது. திமுகவை பற்றியும் முதலமைச்சர் பற்றியும் விமர்சிப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு தகுதி இருக்கிறது என்றால் அதிமுக பற்றி பேசுவதற்கு ரகுபதிக்கு நிச்சயம் தகுதி உண்டு. அதிமுகவில் என்னென்ன கூத்துக்கள் நடக்கப் போகிறது. என்னென்ன புரட்சி வெடிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

திமுக கூட்டணி
திமுக கூட்டணி

தமிழிசை சொன்ன குற்றச்சாட்டை தான் நாங்கள் ஏற்கனவே சொல்லி உள்ளோம். குற்றவாளிகளை பாஜக சேர்த்து வருகிறது என்பதை நாங்கள் ஏற்கனவே கூறி வருகிறோம். அதற்கு இன்று தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். பாஜகவுக்கு கிடைத்துள்ள வாக்கு வங்கி பாமக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளை சேர்த்து வாங்கியுள்ள வாக்கு வங்கி தானே தவிர பாஜக தனித்து வாங்கிய வாக்குகளாக நாங்கள் கருதவில்லை. எங்களுடைய வாக்கு வங்கி என்றைக்குமே குறைவாகாது.

எங்களை பொறுத்தவரை வாக்குகள் சிதறி இருக்கின்றனவே தவிர நிச்சயமாக திமுக கடந்த முறை வாங்கிய வாக்குகளை தான் வாங்கி உள்ளோம். கடந்த முறை 24 இடங்களில் நின்றோம். இந்த முறை 22 இடங்களில் நின்றுள்ளோம். அதனால் அந்த சதவீதத்தை கணக்கிட்டுள்ளனர். அதனால் எங்களது கூட்டணி எப்போதும் பெற்றுள்ள வாக்குகளை நாங்கள் பெற்றுள்ளோம். தமிழ்நாட்டிற்கு மத்திய அமைச்சர்கள் ஒதுக்கப்பட்டால் வரவேற்போம். அப்படி வரக்கூடியவர்களால் தமிழ்நாட்டிற்கு நல்லது கிடைக்கும் என்ற நல்லெண்ணத்தோடு வரவேற்போம்" என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in