வினாத்தாள் கசிவு உறுதியான பின்னரும் நீட் தேர்வு ரத்து செய்யப்படாதது ஏன்? - மத்திய அமைச்சர் விளக்கம்

நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிரான மாணவ போராட்டம்
நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிரான மாணவ போராட்டம்
Updated on
2 min read

'வினாத்தாள் கசிவு உறுதியான பின்னரும் நீட் தேர்வு ரத்து செய்யப்படாதது ஏன்' என்பது குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார்.

வினாத்தாள் கசிவை காரணமாக்கி நீட் தேர்வை ரத்து செய்வது, அதனை முறையாக எழுதி தேர்ச்சியடைந்திருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களை பாதிக்கச் செய்யும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். எனினும், வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம் எடுக்கும் முடிவே இந்த விவகாரத்தில் இறுதியானது என்றும் அவர் கூறியுள்ளார்.

நீட் தேர்வு - தேசிய தேர்வு முகமை
நீட் தேர்வு - தேசிய தேர்வு முகமை

இளநிலை மருத்துவ உயர்கல்வி சேர்க்கைக்கான நீட் தேர்வில் 67 மாணவர்கள் 720 மதிப்பெண்கள் பெற்றதில் முதல் சலசலப்பு வெடித்தது. மேலும் தவறான கேள்வி மற்றும் தேர்வர்களுக்கு தாமதமாக வினாத்தாள் கிடைத்தது உள்ளிட்டவை காரணமாக 1500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது தொடர்பாக தேசிய தேர்வு முகமை அளித்த விளக்கம் பொதுவெளியில் விவாதங்களுக்கு வித்திட்டது.

தேசிய தேர்வு முகமை இந்த விவகாரத்தை கையாண்ட விதம் குறித்து பின்னர் உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. இதனிடையே யுஜிசி நெட் தேர்வின் வினாத்தாள் கசிவு புகார்களை அடுத்து, அந்த தேர்வின் மறுதினமே அது ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் நீட் வினாத்தாள் கசிவு உறுதியான பின்னரும் அத்தேர்வினை ரத்து செய்ய தேசிய தேர்வு முகமை முதல் உச்ச நீதிமன்றம் வரை மறுப்பு தெரிவித்துள்ளனர்.

நீட் வினாத்தாள் கசிவின் பின்னணியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே தொடர்பு கொண்டிருப்பதால், தேசிய அளவிலான தேர்வை ரத்து செய்ய முடியாது என தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இதனையே கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ’நீட் தேர்வு ரத்து செய்யபடுவது அதனை நல்லவிதமாக எழுதிய லட்சக்கணக்கான மாணவர்களை பாதிப்புக்கு உள்ளாக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்

"சில தனிப்பட்ட முறைகேடுகள் காரணமாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் வாழ்க்கையை பணயக்கைதிகளாக வைத்திருப்பது நியாயமற்றது" என்றும் செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் கூறினார். "நாங்கள் பீகார் காவல்துறையுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். அவர்களிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அது கிடைத்தவுடன், எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்” என்று அமைச்சர் தெரிவித்தார்.

”விரைவில் அமைப்பில் உள்ள முரண்பாடுகள் சரி செய்யப்படும். நம்பிக்கை கொள்வோம். எங்கள் அமைப்புகளின் எந்த முறைகேடும் அரசாங்கத்தால் பொறுத்துக் கொள்ளப்படாது" என்று அமைச்சர் கூறினார். மேலும் இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார். என்டிஏவின் உயர்மட்ட அதிகாரிகள் உட்பட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியும் தந்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in