கோயில் திருவிழாவில் பெட்ரோல் குண்டு வீச்சு: நடவடிக்கை கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

மயிலாடுதுறை அருகே கோயில் திருவிழாவில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தியநாதபுரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இரு சமூகத்தினர் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அங்குள்ள கோயிலில் திருவிழா நடைபெற்றது. இதை ஒட்டி அம்மன் திருவீதி உலா, கரகம் எடுத்து வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.

பெட்ரோல் குண்டுவீச்சில் பற்றி எரிந்த தீ
பெட்ரோல் குண்டுவீச்சில் பற்றி எரிந்த தீ

தொடர்ந்து சாமி ஊர்வலம் நடைபெற்ற போது, போலீஸார் பாதுகாப்புக்காக வருகை தந்திருந்தனர். அப்போது மர்ம நபர்கள் சிலர் திடீரென கூட்டத்தை நோக்கி பெட்ரோல் குண்டு ஒன்றை வீசி உள்ளனர். நல்வாய்ப்பாக அது அருகில் இருந்த பகுதியில் விழுந்து வெடித்து சிதறியதால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ஒன்றாக சேர்ந்து கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைத்துள்ளனர். இது தொடர்பாக வைத்தீஸ்வரன் கோயில் போலீஸில் கிராம மக்கள் சார்பில் புகாரளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் குற்றவாளிகள் யாரையும் போலீஸார் இதுவரை கைது செய்யவில்லை என கூறப்படுகிறது.

நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் திடீரென வைத்தீஸ்வரன் கோயில் - மயிலாடுதுறை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக அங்கு வந்த போலீஸார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை கைது செய்வதாகவும் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு நிலவியதோடு, சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in