மைக் அணைக்கப்பட்ட விவகாரம்: மக்களவையில் பதிலளித்த சபாநாயகர் ஓம்பிர்லா

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

மக்களவையில் பிரச்சினைகளை எழுப்பும் உறுப்பினர்களின் மைக்-களை அணைக்க, தலைமை அதிகாரிகளிடம் சுவிட்ச் அல்லது ரிமோட் கண்ட்ரோல் எதுவும் இல்லை என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

மக்களவையில் பேசும்போது, தலைமை அதிகாரிகளால் தங்களின் மைக்-கள் அணைக்கப்படுகின்றன என உறுப்பினர்கள் சிலர் குற்றம் சாட்டினர். இதற்கு சபாநாயகர் கடுமையான ஆட்சேபனை தெரிவித்தார். சபாநாயகர் மைக்-கை அணைத்துவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு மிகவும் கவலைக்குரியது என கூறிய ஓம் பிர்லா, இந்த விவகாரம் குறித்து சபை விவாதிக்க வேண்டும் என தான் விரும்புவதாக கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "தலைவர் தீர்ப்பு அல்லது உத்தரவுகளை மட்டுமே வழங்குகிறார். யாருடைய பெயர் அழைக்கப்படுகிறதோ அந்த உறுப்பினர் சபையில் பேசலாம். தலைவரின் உத்தரவுப்படி மைக் கட்டுப்படுத்தப்படுகிறது. சபாநாயகராக அமர்ந்திருப்பவரிடம் ரிமோட் கன்ட்ரோல் அல்லது மைக்-களுக்கான சுவிட்ச் இல்லை.

சபாநாயகர் இல்லாத நேரத்தில், நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கும் தலைவர்களின் குழுவில் அனைத்து அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் பிரதிநிதிகள் உள்ளனர். இது நாற்காலியின் கண்ணியத்தைப் பற்றியது. குறைந்தபட்சம் நாற்காலியில் இருப்பவர்கள் அத்தகைய ஆட்சேபனைகளை எழுப்பக்கூடாது. கே.சுரேஷும் தலைவராக உள்ளார். நாற்காலிக்கு மைக்கின் கட்டுப்பாடு இருக்கிறதா?” இவ்வாறு ஓம் பிர்லா பேசினார்.

மக்களவை கூட்டம்
மக்களவை கூட்டம்

கடந்த வாரம் நீட் தேர்வு முறைகேடு பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரது மைக் அணைக்கப்பட்டது. இதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியபோதும் மைக் அணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in