சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே அடுத்தவர் மனைவியை பாலியல் இச்சைக்கு அழைத்தவரை பெண் உட்பட ஐந்து பேர் கட்டையால் அடித்துக் கொலை செய்தனர்.
கஸ்தூரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (50) நெசவு கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஆனால் மனைவி ஒரே ஆண்டில் விவாகரத்து பெற்று இவரிடம் இருந்து பிரிந்து சென்றார்.
இதனால் மதுவுக்கு அடிமையான மாரிமுத்து, வீட்டின் அருகே வசிக்கும் பெண்களை போதையில் பாலியல் இச்சைக்கு அழைத்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அக்கம்பக்கத்தினர் பெரும் மன உளைச்சலில் இருந்தனர்.
இந்நிலையில் மாரிமுத்து வழக்கம் போல் குடிபோதையில் பக்கத்து வீட்டுக்காரர் சண்முகம் என்பவரின் மனைவி கவிதா (34) தூங்கிக் கொண்டிருந்த போது, அவரை பாலியல் இச்சைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.
இதுபோல் பலமுறை மாரிமுத்து தொந்தரவு செய்துள்ளதாகவும், கிராமத்தினர் கட்டி வைத்து அடித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து இதே போன்று செய்து வருவதால், ஆத்திரம் அடைந்த கவிதா மற்றும் அவரது உறவினர்கள் மாரிமுத்துவை துரத்திச் சென்று கட்டையால் தாக்கினர்.
மாரிமுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாரிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து மாரிமுத்துவின் உறவினர் அளித்த புகாரில் கவிதா, அவரது கணவர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.