நீட் தேர்வு நடைமுறைக்கு முடிவு கட்டுங்கள்: பிரதமரை வலியுறுத்தும் மம்தா பானர்ஜி

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி
Updated on
2 min read

நீட் தேர்வு நடைமுறைக்கு முடிவுகட்டுமாறு பிரதமர் மோடியை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.

மருத்துவ இளநிலை உயர்கல்விக்கான நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு மட்டுமே குரல் கொடுத்து வந்த நிலையில், தற்போது தேசம் முழுமைக்குமே நீட் எதிர்ப்பு முழக்கத்தை கையில் எடுத்துள்ளது. தேசிய தேர்வு முகமையின் நீட் மற்றும் நெட் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு சர்ச்சை இதற்கு காரணமாகி உள்ளது.

நீட் தேர்வு
நீட் தேர்வு

பல்கலைக்கழக மற்றும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான யுஜிசி-நெட் தேர்வின் வினாத்தாள் கசிவு உறுதியானதும், தேர்வு நடைபெற்ற மறுநாளே அது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதே போன்று நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மட்டுமன்றி, தேர்வு முகமையின் கருணை மதிப்பெண்கள் தொடர்பான சர்ச்சையும் பெரிதாக வெடித்தது. ஒட்டுமொத்தமாக தேசிய தேர்வு முகமையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானது.

மத்திய அரசை சங்கடத்தில் தள்ளியிருக்கும் நீட் - நெட் வினாத்தாள் கசிவு விவகாரங்கள், தேசிய தேர்வு முகமையின் சீரமைப்புக்கான ஏற்பாடுகளுக்கு வித்திட்டுள்ளன. தேசிய தேர்வு முகமையின் அடுத்தக்கட்ட தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டதோடு, நடந்து முடிந்த தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்படாது உள்ளன. இவற்றின் மத்தியில் தேசிய தேர்வு முகமையின் தேர்வுகளில் பல லட்சம் பேர் பங்கேற்கும் நீட் நுழைவுத்தேர்வு நடைமுறையை ரத்து செய்யுமாறு குரல்கள் எழுந்துள்ளன.

தேசிய தேர்வு முகமை
தேசிய தேர்வு முகமை

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், “நீட் தேர்வு நடைமுறையை ரத்து செய்வதுடன், அதற்கான தேர்வை மாநில அரசுகளே நடத்தும் முந்தைய முறையை மீட்டெடுக்கவும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு’ வலியுறுத்தி உள்ளார். மேலும் ‘நீட் மற்றும் நெட் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் தனது கடிதத்தில் மம்தா பானர்ஜி வலிறுத்தி உள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in