பிரியங்கா காந்திக்காக வயநாடு பிரச்சாரத்துக்கு வரும் மம்தா... காங்கிரஸை நெருங்கும் தீதி-யின் புதிய வியூகம்

மம்தா பானர்ஜி - பிரியங்கா காந்தி
மம்தா பானர்ஜி - பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி களமிறங்கும் வயநாடு இடைத்தேர்தலில் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள மம்தா பானர்ஜி முன்வருகிறார். இதன் மூலம் ’இந்தியா கூட்டணி’யில் புளித்திருந்த காங்கிரஸ் - திரிணமூல் உறவு மீண்டும் நெருக்கம் கண்டிருக்கிறது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தபோதும், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கடும் அதிருப்தி நிலைப்பாடினைக் கொண்டிருந்தார். இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் முதல் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் வரை பல்வேறு அங்கீகாரங்கள் ராகுல் காந்திக்கு செல்வதை வெளிப்படையாகவே தடுத்தார். ராகுல் காந்திக்கு மாற்றாக காங்கிரஸ் தலைவர் கார்கே-வை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த அர்விந்த் கேஜ்ரிவால் துணையுடன் மம்தா பானர்ஜி முயன்றார். ஆனால் அதற்கு கார்கே மறுப்பு தெரிவித்ததால் அந்த முயற்சி முடங்கியது.

ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி
ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி

அடுத்தபடியாக இந்தியா கூட்டணியின் அங்கமாக இருப்பினும் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்திருந்தார். மேற்கு வங்கத்தின் காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரியின் தீவிரமான மம்தா பானர்ஜி எதிர்ப்பு போக்கும் இதற்கு காரணமானது. இதன் விளைவாக காங்கிரஸ் தலைமையின் வேண்டுகோளையும் மீறி திரிணமூல் காங்கிரஸ் தனித்து நின்றது. காங்கிரஸ் கட்சியுடனான முரண்பாட்டின் உச்சமாக அதனை மம்தா பானர்ஜி எள்ளி நகையாடியதும் நடந்தது.

முந்தைய மக்களவைத் தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டி இம்முறை காங்கிரஸ் கட்சி 40 இடங்களைக்கூட தாண்டாது என்றார். காங்கிரஸ் கட்சியை தனது பிடியிலிருந்து ராகுல் காந்தி விடுவித்தால் மட்டுமே அக்கட்சிக்கும் விமோசனம் என்ற அரசியல் விமர்சகர்களின் கருத்தினை எதிரொலித்தார். இவற்றின் விளைவாக காங்கிரஸ் - திரிணமூல் இடையிலான உறவு தேசிய அளவிலும் புளித்திருந்தது.

ஆனால் மக்களவைத் தேர்தல் முடிவுகளின் இறுதியில் மம்தா பானர்ஜியின் கணிப்புகள் பலவும் பொய்த்துப் போயின. காங்கிரஸ் தனது எழுச்சியை பதிவு செய்ததோடு, எதிர்க்கட்சிகள் கூடாரத்தின் அறிவிக்கப்படாத தலைவராகவும் தன்னை ராகுல் காந்தி முன்னிறுத்தி இருக்கிறார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

பாஜகவை தனிப்பெரும்பான்மைக்கு வழியின்றி கூட்டணி ஆட்சிக்கு தள்ளியிருப்பதோடு, மோடி3.0 பொறுப்பேற்ற நாள் முதலே அக்கட்சிக்கு ராகுல் காந்தி கடும் குடைச்சல் தந்து வருகிறார். மேலும் மோடி அரசியல் மற்றும் அரசின் சொதப்பல்களை ராகுல் அனுதினம் சாடி வருகிறார். காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் புதிய பிம்பம் மத்தியில் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டதும், மம்தா பானர்ஜி இறங்கி வந்திருக்கிறார். முக்கியமாக மேற்கு வங்கத்தில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததில் மம்தா பானர்ஜிக்கான நந்தி விலகியிருக்கிறது.

மேற்கு வங்கம் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது கடும் பாய்ச்சல் காட்டும் மத்திய விசாரணை அமைப்புகள், மேற்கு வங்கத்தில் பாஜகவின் வளர்ச்சி ஆகியவற்றால் மம்தா பானர்ஜி தடுமாறி வருகிறார். தனது புதிய அரசியல் வியூகமாக காங்கிரஸ் கட்சியை வலிய நெருங்குகிறார். ராகுல் காந்தி தான் போட்டியிட்டு ஜெயித்த இரட்டைத் தொகுதிகளில் ரேபேரலியை தன்வசம் வைத்துக்கொண்டு, வயநாடு தொகுதியிலிருந்து விலகுகிறார். இதனால் இடைத்தேர்தல் அறிவிப்பாகும் வயநாடு தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.

இந்த தருணத்தில் காங்கிரஸ் கட்சிக்கான தனது ஆதரவை நல்கும் நோக்கில், பிரியங்கா காந்திக்கு ஆதரவளித்து அங்கே ஆதரவுப் பிரச்சாரம் மேற்கொள்ள வருகிறார் மம்தா பானர்ஜி. மம்தாவின் இந்த நகர்வு இந்தியா கூட்டணிக்கு புத்துயிரூட்டுமா என்பதும் விரைவில் தெரியும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in