ஆண் என்றாலே எப்போதும் தவறானவன் என்று அர்த்தம் அல்ல... பாலியல் வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் விளக்கம்!

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஆண் விடுதலை
பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஆண் விடுதலை
Updated on
2 min read

பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டம் பெண்களை மையமாகக் கொண்டதாக இருப்பினும் ஆண் துணை என்றாலே எப்போதும் தவறு என்று அர்த்தம் இல்லை என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருமணத்தை காரணம் காட்டி ஒரு பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆண் ஒருவரை விடுவித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், இந்த விளக்கத்தை வழங்கியுள்ளது. தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் ராகுல் சதுர்வேதி மற்றும் நீதிபதி நந்த் பிரபா சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுபோன்ற வழக்குகளில் ஆதாரம் அளிக்க வேண்டிய பொறுப்பு புகார்தாரர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உள்ளது என்றும் கூறியது.

அலகாபாத் உயர் நீதிமன்றம்
அலகாபாத் உயர் நீதிமன்றம்

"சட்டத்தின் அத்தியாயம் XVI 'பாலியல் குற்றங்கள்' என்பது சந்தேகமின்றி, ஒரு பெண்ணின் கண்ணியத்தையும் மரியாதையையும் பாதுகாப்பதற்கான பெண்களை மையமாகக் கொண்ட சட்டமாகும். ஆனால் சூழ்நிலைகளை மதிப்பிடும் போது, ​​இது ஆண் மட்டும் அல்ல; அவரது பார்ட்னரான பெண்ணின் தவறுக்கும் பங்கு சேர்க்கிறது. பாலியல் குற்றங்களில் இருவர் மீதும் சுமை உள்ளது" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

முன்னதாக இந்த பாலியல் பலாத்கார வழக்கில் கீழமை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட ஆணை விடுவித்து இருந்தது. அதனை எதிர்த்த பெண்ணின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் அலகாபாத் உயர் நீதிமன்றம் பின்னர் விசாரித்தது. பாலியல் குற்றச்சாட்டு மட்டுமன்றி, ஆணுக்கு எதிராக எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2019-ம் ஆண்டில், திருமண வாக்குறுதியின் பேரில் ஆண் தன்னுடன் பாலியல் உறவை ஏற்படுத்தியதாகவும், ஆனால் பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகவும் அப்பெண் பிரயாக்ராஜ் காவல்துறையில் புகார் அளித்தார். மேலும் தனது சாதியை இழிவுபடுத்தும் வகையில் ஆண் பேசியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். காவல்துறை விசாரணைக்குப் பிறகு, 2020-ல் குற்றப்பத்திரிகை தாக்கலானது.

விசாரணை நீதிமன்றம், பிப்ரவரி 8, 2024 அன்று, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆணை விடுவித்தது. இதையடுத்து பெண் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அங்கு விசாரணை நீதிமன்றம் அளித்த விடுதலையை உயர் நீதிமன்றம் தற்போது உறுதி செய்துள்ளது.

இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளான ஆண் 10 ஆண்டுகளுக்கு முன்னரே திருமணமானவர் என்றபோதும், அடுத்த சில ஆண்டுகளில் மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தவர் என்பதால், அவர் தரப்பில் முழுமையாக உண்மையை மறைத்ததாக சொல்ல முடியாது என்ற வாதத்தை நீதிமன்றம் பதிவு செய்து கொண்டது.

பாலியல் குற்றச்சாட்டு
பாலியல் குற்றச்சாட்டு

மேலும் ’வழக்கில் தொடர்புடைய ஆண் - பெண் இருவரும் அலகாபாத் மற்றும் லக்னோவில் உள்ள பல ஓட்டல்கள் உள்ளிட்ட தங்குமிடங்களில் சென்று தங்கள் பாலியல் தொடர்பை பரஸ்பர சம்மதத்துடன் பராமரித்து வந்துள்ளனர். எனவே இந்த வழக்கில் யார் யாரை ஏமாற்றுகிறார்கள் என்பதை தீர்மானிப்பது கடினம்’ என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

இது சம்பந்தமாக, புகார்தாரரால் தனது சாதித் தொடர்பான கோரிக்கையை தெளிவுபடுத்த முடியவில்லை என்பதோடு, இந்த பின்னணியில், பாலியல் துன்புறுத்தல் மற்றும் கற்பழிப்புக்கு ஆளாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கூற்றுக்களை ஏற்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது. எனவே விசாரணை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்தது சரியானதே என அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் முடிவு செய்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in