பெரு தேசத்தில் பெரும் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பதற்றம்

நிலநடுக்கம்
நிலநடுக்கம்

பெரு தேசத்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதில், அதனைத் தொடர்ந்து அங்கே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்அமெரிக்க தேசமான பெரு, பெரும் நிலநடுக்கத்துக்கு ஆளானதோடு, அதனையொட்டி சுனாமி எச்சரிக்கையும் அங்கே விடுக்கப்பட்டது. இதனால் பெருவில் பதற்றம் சூழ்ந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12.36 மணியளவில் 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பெரு நிலநடுக்கத்தை அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான யுஎஸ்ஜிஎஸ் உறுதி செய்துள்ளது.

பெருவில் உள்ள அட்டிகிபா மாவட்டத்தில் இருந்து 8.8 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் அடையாளம் காணப்பட்டது. மேலும் சில கடற்கரையோரங்களில் சுனாமி அலைகள் எழும்பவும் வாய்ப்பு உருவானது.

முதலில் பெரும் அச்சுறுத்தல் ஏதும் அறியப்படவில்லை என்று கூறிய பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், பின்னர் பல மீட்டர்கள் உயரத்துக்கு அலைகள் எழும் சாத்தியத்தை உறுதி செய்தது. இதனையடுத்து கடற்கரையை ஒட்டிய குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

பெரு நிலநடுக்கம்
பெரு நிலநடுக்கம்

பெரு நிலநடுக்கம் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சி அளித்து வருகின்றன. நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்த சுனாமி காரணமான பாதிப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை. ஆனால் பெருவுக்கு வெளியே வசிக்கும் அந்நாட்டினர் நிலநடுக்கம் தொடர்பான பதிவுகளை பகிந்து பெரு தேசத்துக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in