7ம் கட்ட தேர்தல்: மேற்கு வங்கத்தில் 2 வாக்குச் சாவடிகளில் வன்முறை; தண்ணீரில் வீசப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

தண்ணீரில் வீசப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்
தண்ணீரில் வீசப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

7ம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தண்ணீரில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலின் 7வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 நாடாளுமன்றத் தொகுதிகளில் நடைபெறுகிறது.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் பல இடங்களில் வாக்குப்பதிவு தொடங்கியதுமே வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம், குல்தாய் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 40, 41-ல், இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதுமே வன்முறை ஏற்பட்டது.

இந்நிலையில் அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் (வாக்காளர் வாக்குப்பதிவு சரிபார்ப்பு) இயந்திரம் ஆகியவை தண்ணீரில் வீசப்பட்டன. ஆனால், இந்த இயந்திரங்கள், பழுது ஏற்பட்டால் மாற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த கூடுதல் இயந்திரங்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பங்கரில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ஐஎஸ்எஃப்) கட்சி தொண்டர்களிடையே மோதல் வெடித்தது. அங்கு கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.

7ம் கட்ட மக்களவைத் தேர்தல்
7ம் கட்ட மக்களவைத் தேர்தல்

இதேபோல் கொல்கத்தா உத்தர் தொகுதியில் உள்ள காசிபோரில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பாஜக வேட்பாளர் தபாஸ் ராய்க்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, சந்தேஷ்காலியில் பாஜகவைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களின் வீடுகளுக்கு நேற்று இரவு திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள், போலீஸார் சென்று அவர்களை மிரட்டியதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in