
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீமூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, விசாரணை தொடங்கியுள்ளது.
சிவகுமார் என்பவரின் மகள் சுகிர்தா (27), ஸ்ரீமுகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த 6-ம் தேதி தனது அறையில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முன்னதாக மாணவி சுகிர்தா கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில் பேராசிரியர் டாக்டர் பரமசிவன் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும், பயிற்சி மருத்துவ மாணவன் ஹரிஷ், மாணவி பிரித்தி ஆகிய 2 பேரும் தன்னை மனதளவில் துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
எனவே தனது மரணத்துக்கு இவர்கள் 3 பேரும் தான் காரணம் என்று எழுதியிருந்தார். இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் விசாரணை துரிதமாக நடைபெறவில்லை என்று புகார் எழுந்தது.
எனவே, வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று மக்களும், அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினர். இந்நிலையில் முன்னதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர் பரமசிவம், நேற்று கைது செய்யப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து வழக்கில் சிபிசிஐடி போலீஸார் முதல்கட்ட விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.