
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பலியானவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பழைய பேட்டையில் பட்டாசு குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு குடோனில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகிய நிலையில், ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெடி விபத்திற்கு பட்டாசு குடோன் அருகே செயல்பட்ட ஓட்டலில் சிலிண்டர் வெடித்ததே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது வருத்தை அளிக்கிறது என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக தமிழக முதல்வர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.50,000 அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.