ஆளுநர் ஆர்.என்.ரவியுடன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
ஆளுநர் ஆர்.என்.ரவியுடன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து எடப்பாடி பழனிசாமி புகார்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, ஆளுநர் மாளிகையில் சந்தித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார்.

கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 60 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலருக்கு பார்வையிழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தை உலுக்கிய இந்த விவகாரம், மாநிலத்தில் அரசியல் ரீதியாக ஆளும் திமுக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம்

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் பேரவையில் இந்த விவகாரத்தை எழுப்பி அதிமுக அமளி மற்றும் வெளிநடப்பில் ஈடுபட்டது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தை கண்டித்து நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை அதிமுக நடத்தியது. இந்நிலையில் இன்று காலையில் சட்டப் பேரவைக் கூட்டம் தொடங்கியதுமே மீண்டும் அமளியில் ஈடுபட்டது. இதையடுத்து சபாநாயகர் உத்தரவின் பேரில் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அக்கட்சி முன்னணி தலைவர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம் உள்ளிட்டோருன் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார்.

ஆளுநரிடம் மனு அளித்த எடப்பாடி பழனிசாமி
ஆளுநரிடம் மனு அளித்த எடப்பாடி பழனிசாமி

அப்போது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார்.

இதேபோல், நேற்று தமிழக பாஜக சார்பிலும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in