நெல்லையில் சிபிஎம் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தை சில சாதி அமைப்புகள் ஊதி பெரிதாக்குவதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளின் பெற்றோர்கள் அத்துமீறி நுழைந்து அலுவலகத்தை அடைத்து நொறுக்கிய நிலையில் அதில் 13 பேர் கைது செய்யப்பட்டு 7 பெண்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு ஆறு ஆண்கள் தூத்துக்குடி பேருரணி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், " அரசியல் கட்சி அலுவலகத்தில் சாதி வெறியர்கள் பட்டப்பகலில் தாக்குதல் நடத்தும் சம்பவம் சமூகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழலை காட்டுகிறது. இதை கண்டித்து தமிழக அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். சமூக விரோதிகள் மீது காவல்துறை கடமையை நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு காவல்துறையின் பார்வையாளராக இருப்பதை அனுமதிக்க முடியாது.
ஒட்டுமொத்த சமூகமே சாதிக்கு எதிராக எதிர்ப்புகளை தெரிவிக்க வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் அடிக்கடி சாதிவெறி படுகொலை நடப்பது தொடர் கதையாகி வருகிறது. ஆணவ கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இது தமிழகத்திற்கு அவப்பெயர். இது தமிழகத்திற்கு அழகு இல்லை. அரசு இந்த சம்பவத்தில் தீவிரமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
எங்கள் கட்சி மீதும் பலர் விமர்சனம் வைக்கிறார்கள். நாங்கள் யாரை கடத்தி சென்று கல்யாணம் பண்ணி வைக்கவில்லை. எங்களை நாடி வரும்போது நாங்கள் பாதுகாப்பு கொடுக்கிறோம். சட்டப்படி விரும்புவர்களை திருமணம் செய்து கொள்ள உரிமை உண்டு. அரசியலமைப்பு சாசனம் அந்த உரிமை வழங்கி உள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியதை எங்கள் கட்சி செய்கிறது. மறுப்பு திருமணம் செய்யும் காதலர்களுக்கு கேடயமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும். பெற்றோர்கள் புறக்கணிக்கப்பட்ட அந்த ஜோடிகளுக்கு வேலை வீடு உள்ளிட்ட அடிப்படையை வசதிகளை செய்து தர வேண்டும். அரசு செய்யவில்லை என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்யும்.
சில சாதி அமைப்புகள் தான் இதை ஊதி பெரிதாகிறது. சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் கூட காதல் ஜோடிகளை ஏற்றுக்கொண்டாலும் சாதியை வைத்து தேர்தல் அரசியல் செய்பவர்களே இதை பெரிதாக்கி இந்த கொடுமையை செய்கிறார்கள். இந்த சாதி வெறி அமைப்பின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணவ படுகொலை தடுப்பு சட்டம் மசோதா தயாராக உள்ளது. காதல் தம்பதிகளை சாதி மறுப்பு திருமணம் செய்யும் தம்பதிகளை பாதுகாக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளது.
சாதிய சகதியிலேயே ஊறி மக்கள் அழிய வேண்டுமா?. ஆணவ படுகொலைகள் நடைபெற வேண்டுமா? சாதி கொலைகளுக்கு சாதாரண மக்கள் காரணம் இல்லை. சாதி வெறியர்களும், கூலிப்படை தான் இதை செய்கிறார்கள். இப்படியே போமாயாருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டு விடும். கூலிப்படையை அழிக்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்
இதையும் வாசிக்கலாமே...
திருநங்கைகளுக்கு அனைத்து அரசு பணிகளிலும் 1 சதவீத இடஒதுக்கீடு... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து... 4 பேர் பலி; பலர் படுகாயம்
சவுதி அரேபியாவில் கடும் வெப்பம்: ஹஜ் பயணம் சென்ற 19 யாத்ரீகர்கள் உயிரிழப்பு!
5 மாடுகளின் உயிரைப் பறித்த பரோட்டா... கொல்லம் அருகே பரிதாபம்!