விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜே பிரிட்டன் சிறையில் இருந்து விடுவிப்பு

பிரிட்டன் சிறையிலிருந்து ஜூலியன் அசாஞ்சே விடுவிப்பு
பிரிட்டன் சிறையிலிருந்து ஜூலியன் அசாஞ்சே விடுவிப்பு

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ள சம்மதித்ததைத் தொடர்ந்து, பிரிட்டன் சிறையிலிருந்து நேற்று இரவு விடுவிக்கப்பட்டார்.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடந்த போர்கள் பற்றிய அமெரிக்க ராணுவ ரகசியங்களை கடந்த 2010ம் ஆண்டு வெளியிட்டதற்காக, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்ய அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கிடையே பாலியல் குற்றச்சாட்டில் ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்ய சுவீடன் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது.

இதையடுத்து பிரிட்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் அசாஞ்சே தஞ்சமடைந்தார். இந்நிலையில் கடந்த 2019ல், அசாஞ்சேவுக்கு அளித்து வந்த ஆதரவை ஈக்வடார் திரும்பப் பெற்றது. இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளாக பிரிட்டனில் உள்ள சிறையில் அசாஞ்சே அடைக்கப்பட்டிருந்தார்.

அமெரிக்க விடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த 2022ம் ஆண்டு அவரை நாடு கடத்த பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்தது. எனினும் இதுதொடர்பான வழக்கு அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், பசிபிக் பகுதியில் உள்ள அமெரிக்கப் பகுதியான வடக்கு மரியானா தீவில் உள்ள நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தின்படி, ஜூலியன் அசாஞ்சே, தேசிய பாதுகாப்புத் தகவல்களைப் பெறுவதற்கும் பரப்புவதற்கும் சதி செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொள்ள சம்மதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலியன் அசாஞ்சே
ஜூலியன் அசாஞ்சே

இதையடுத்து, பிரிட்டன் நேரப்படி இன்று அதிகாலை விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே விடுதலை செய்யப்பட்டு அந்நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் அமெரிக்க பிராந்தியத்தில் உள்ளூர் நேரப்படி நாளை காலை ஆஜராக உள்ளார். அவருக்கு 62 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அசாஞ்சே ஏற்கெனவே பிரிட்டன் நீதிமன்றத்தில் சிறைவாசத்தில் இருந்ததால், விசாரணைக்குப் பின்னர் அவர், தனது தாயகமான ஆஸ்திரேலியாவுக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in