ஆட்சி மட்டுமல்ல கட்சியிலும் அதிரடி... பாஜவின் அடுத்த தேசிய தலைவர் யார்?

ஜெ.பி.நட்டா
ஜெ.பி.நட்டா

மோடி 3.0 ஆட்சி வெற்றிகரமாக பொறுப்பேற்றதை அடுத்து, பாஜகவின் அடுத்த தேசிய தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி வெற்றிகரமாக தொடர்ந்து மூன்றாவது முறையாக இன்று பதவியேற்றுள்ளது. ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில் மோடியைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் அடுத்தடுத்து பதவியேற்றனர். இந்த வரிசையில் நிதின் கட்காரியைத் தொடர்ந்து ஜெ.பி.நட்டா பதவியேற்றார்.

மோடி, நட்டா, அமித் ஷா
மோடி, நட்டா, அமித் ஷா

பாஜகவின் தேசிய தலைவரான நட்டா மத்திய அமைச்சராக பதவி பிரமாணம் மேற்கொண்டிருப்பதால், கட்சியின் அடுத்த தேசிய தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மோடியின் 2014 ஆட்சியின் போது மத்திய அமைச்சராக இருந்த நட்டா, தற்போது மோடியின் மூன்றாவது ஆட்சியில் மீண்டும் அமைச்சரவைக்குத் திரும்புகிறார். ஜெ.பி.நட்டாவின் தலைமையில் பாஜக பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது. முன்னதாக கட்சியின் தலைவராக அமித் ஷா காட்டிய வேகம், நட்டாவிடம் கிடைக்கப்பெறவில்லை.

அரசியல் வியூகங்களில் சாணக்கியர் என புகழப்படும் அமித் ஷா, கட்சியின் தலைவராக முன்னெடுத்துச் சென்றதில் இரண்டாம் முறையாக பாஜக வெற்றிகரமாக ஆட்சியை பிடித்தது. அவர் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில், கட்சியின் தலைவர் பொறுப்புக்கு நட்டா வந்தார். ஆனால் அமித் ஷா இடத்தை அவர் நிரப்ப முடியாதது நடைமுறையில் வெளிப்பட்டது.

பாஜக தலைவர்கள் அமித் ஷா - மோடி - நட்டா
பாஜக தலைவர்கள் அமித் ஷா - மோடி - நட்டா

கட்சி, ஆட்சி இரண்டிலுமே மோடியின் முகமே முன்னிறுத்தப்பட்ட போதும், கட்சியின் தேசிய தலைவருக்கு என பிரத்யேக பொறுப்புகள் இருக்கின்றன. மோடியின் கண்ணசைவின்றி பாஜகவில் எதுவும் நடைபெறாது என்றாலும், மக்களவைத் தேர்தலை பொறுத்தளவில் கட்சியின் தலைவராக நட்டாவின் பங்களிப்பில் பல்வேறு தடுமாற்றங்கள் தென்பட்டன. அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தல்களை திடமாக எதிர்கொள்ளும் வகையில், கட்சியில் புதிய ரத்தத்தை பாய்ச்சுவதற்கு உரிய தலைமை அவசியமாகிறது. இதன்படி புதிய தேசிய தலைவர் பாஜகவில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். ஆனால் அவர் யார் என்பதுதான் பாஜகவினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக நீடித்து வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in