அரையிறுதியில் பாகிஸ்தான்... இதுதான் ஒரே வாய்ப்பு!

அரையிறுதியில் பாகிஸ்தான்...  இதுதான் ஒரே  வாய்ப்பு!

உலக கோப்பைக் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி, இலங்கையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 4-ம் இடத்தை பிடித்துள்ள நிலையில், பாகிஸ்தான் அணிக்கான அரையிறுதி வாய்ப்பு பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.

நேற்று, வெற்றி பெற்றால் மட்டும் அரையிறுதிக்கு தகுதி என்ற நிலையில், நியூசிலாந்து அணி இலங்கைக்கு எதிராக களம் இறங்கியது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 46.4 ஓவரில் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் குசால் பெராரா அதிரடியாக ஆடி 51 ரன்கள் எடுத்தார்.

கடைசியில் போராடிய தீக்சனா 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து அணி சார்பில் போல்ட் 3 விக்கெட்டும், பெர்குசன், சான்ட்னர், ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது.

கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகிய இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். தொடக்க விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்த நிலையில் கான்வே 45 ரன்களிலும், தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா 42 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய டேரில் மிட்செல் அதிரடியாக விளையாடி 43 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி 23.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதிப்படுத்திவிட்டது.

நியூசிலாந்து அணி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று +0.743 என்ற ரன் ரேட்டுடன் புள்ளிபட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி 8 புள்ளிகள் பெற்று +0.036 ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் தனது கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் நாளை மோதவுள்ளது. பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இங்கிலாந்தை 273 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அல்லது இங்கிலாந்து அணி கொடுக்கும் இலக்கை 2.3 ஓவர்களில் அடித்து வெற்றி பெற வேண்டும்.

2.3 ஓவர்களில் இலக்கை எட்டுவது நடக்காத விஷயம். வேண்டும் என்றால் முதலில் பேட்டிங் செய்து 400 ரன்களுக்கு மேல் குவித்து இங்கிலாந்தை 112 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ய வேண்டும். இப்படி நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in