முடிவுக்கு வந்ததா மோதல்? - தமிழிசையுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு!

தமிழிசை அண்ணாமலை
தமிழிசை அண்ணாமலை

கடந்த சில நாட்களாக நீடித்த கருத்து மோதல்களை தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் தமிழிசையை, அண்ணாமலை இன்று திடீரென சந்தித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜக கூட்டணியின் மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இடையே மோதல் வெடித்தது. அதிமுகவோடு பாஜக கூட்டணி அமைத்திருந்தால் 35 தொகுதிகளில் வென்றிருக்கலாம் என்றும், தமிழக பாஜகவில் குற்றப்பின்னணி கொண்டவர்கள் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தமிழிசை கூறியது பரபரப்பை பற்றவைத்தது.

அதேநேரத்தில் 2026 தேர்தலிலும் அதிமுகவோடு கூட்டணி இல்லையென திட்டவட்டமாக கூறினார் அண்ணாமலை. மேலும் அண்ணாமலையின் அனுதாபிகள் தமிழிசையை சமூக வலைதளங்களில் சகட்டுமேனிக்கு வசைபாடினர். இதற்கெல்லாம் உச்சமாக ஆந்திர மாநில முதல்வர் பதவியேற்பு விழா மேடையிலேயே தமிழிசையை, உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக பேசியதாக வெளியான செய்தி சமூக வலைதளங்களை சூடாக்கியது.

செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை செளந்தரராஜன்
செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை செளந்தரராஜன்

இந்த சூழலில்தான் இன்று தமிழிசையை அண்ணாமலை நேரில் சந்தித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ‘இன்றைய தினம், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், பாஜக மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான, அக்கா தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.

தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த அக்கா தமிழிசையின் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையின் பதிவை பகிர்ந்துள்ள தமிழிசை, ‘தமிழக பாஜக மாநிலத்தலைவர் அன்புத்தம்பி அண்ணாமலை அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி’ என்று தெரிவித்துள்ளார். ஒருவழியாக இருவருக்குமான மோதல் முடிவுக்கு வந்துவிட்டதா என பெருமூச்சு விட்டு வருகின்றனர் தமிழக பாஜகவினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in