ஸ்ரீபெரும்புதூர் ஐபோன் தொழிற்சாலையில் மணமான பெண்களுக்கு வேலை மறுப்பா? சர்ச்சைக்கு விளக்கமளித்தது ஃபாக்ஸ்கான்

ஃபாக்ஸ்கான் நிறுவனம்
ஃபாக்ஸ்கான் நிறுவனம்

ஸ்ரீபெரும்புதூர் ஐபோன் தொழிற்சாலையில் திருமணமான பெண்களை பணிக்கு அமர்த்துவதில்லை என்று எழுந்த சர்ச்சை தொடர்பாக, ஆலை நிர்வாகம் அரசுக்கு விளக்கம் தந்துள்ளது.

பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தயாரிப்பு மையங்களில் ஒன்றாக தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்திருக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் செயல்படுகிறது. ஆனால் இந்த நிறுவனத்தில் மணமான பெண்களுக்கு பணிவாய்ப்பு மறுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. 2 தினங்களுக்கு முன்னர் இது தொடர்பாக ராய்ட்டர் நிறுவனம் வெளியிட்ட செய்தியும் புதிய சர்ச்சையை கிளப்பியது.

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணி நாடும் பெண்கள்
ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணி நாடும் பெண்கள்

இதனையடுத்து ஃபாக்ஸ்கான் ஆலை பணியமர்த்தலில் பாலின பாகுபாடு நிலவுவதாக எழுந்த புகார் தொடர்பாக, தமிழக அரசிடம் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் விரிவான அறிக்கை கோரியிருந்தது.

இவற்றின் மத்தியில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் அரசுக்கு அளிக்கப்பட்ட விளக்கம் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் ’தங்கள் ஆலையில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களில் 25 சதவீதம் பேர் திருமணமான பெண்கள் என்றும், இது மொத்தப் பெண்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் திருமணமானவர்களைக் குறிக்கிறது என்று ஃபாக்ஸ்கான் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ’திருமண நிலை மற்றும் மதத்தைப் பொருட்படுத்தாமல் ஊழியர்கள் அனைவரும் உலோகம் அணிவதைத் தவிர்க்க வேண்டும் என்ற தங்களது பாதுகாப்பு நெறிமுறை பாரபட்சமானது அல்ல’ என்றும் தெரிவித்துள்ளது.

ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தற்போது 70 சதவீத பெண்களும், 30 சதவீத ஆண்களும் பணியாற்றுகின்றனர். மேலும் 45,000 தொழிலாளர்களை தொட்டதன் மூலம் நாட்டிலேயே பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் மிகப்பெரிய தொழிற்சாலையாக தமிழ்நாட்டின் ஃபாக்ஸ்கான் விளங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன்
ஐபோன்

திருமணமான பெண்கள் ஆபரணங்கள் அல்லது நகைகள் என்ற பெயரில் உலோகங்கள் அணிவதற்காக பாகுபாடு காட்டப்படுவது பற்றிய விவாதம், தொழிற்சாலைகளில் உலோகத்தை அணிவது ஒரு பாதுகாப்பு பிரச்சினை என்பதன் பின்னணியில் எழுந்தது என்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது. .

"ஆணோ பெண்ணோ உலோகங்களை அணிந்திருக்கும் எந்தவொரு நபரும் தங்களின் திருமணநிலை, மதம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல், அவற்றை அகற்றிய பின்னரே தொழிற்சாலையில் பணிபுரிவது அவசியம். பாதுகாப்புக் காரணங்களுக்காக, உலோகம் அணிந்த எவரும் ஆலையில் பணியாற்ற அனுமதிக்கப்படுவதில்லை. இது இங்குமட்டுமன்றி பல்வேறு தொழிற்சாலைகளில் நடைமுறையில் உள்ளதாகும்” என்றும் ஃபாக்ஸ்கான் விளக்கம் தந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in