
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி தொடர் தோல்வியை சந்தித்து வருவதால், அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக் ராஜினாமா செய்துள்ளார்.
பாகிஸ்தான் அணி தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியை தழுவியது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி, இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
தொடர் தோல்வியை அடுத்து பாகிஸ்தான் அணி மீது விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் அணியின் தேர்வுக்குழு தலைவர் இன்சமாம் உல் ஹக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் 2019 முதல் 2019 வரை அணியின் தலைமை தேர்வாளராக பொறுப்பு வகித்தார்.
இந்நிலையில் அணியின் தேர்வுக்குழு தலைவராக இரண்டாவது முறையாக கடந்த ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். இவரது தலைமையிலான குழு தான் ஆசிய கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை என இரு தொடர்களுக்கும் வீரர்களை தேர்வு செய்தது.
இரண்டு தொடர்களிலும் பாகிஸ்தான் அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியது. இந்நிலையில் தற்போது இன்சமாம் உல் ஹக் தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்சமாமின் ராஜினாமாவுக்கு வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது.
உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் முக்கிய வீரர்கள் சிலருக்கும் ஊதியம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஐசிசியிடம் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெற்ற பணத்தில் ஒரு பங்கை வீரர்களுக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.
அந்த சமயத்தில் இன்சமாம் வீரர்களிடம் மத்தியஸ்தம் செய்து 48 மணி நேரத்திற்குள் சர்ச்சையைத் தீர்ப்பதாக உறுதியளித்தார். ஆனால் சர்ச்சைகள் தீரவில்லை. பிரச்சினை உச்சக்கட்டத்தை எட்ட வீரர்களின் கோரிக்கைகளை பிசிபி ஏற்றுக்கொண்டது. இந்த விவகாரத்தில் இன்சமாம் பிரச்சினைகளை எழுப்பியிருக்கலாம் என பாகிஸ்தான் ஊடகங்கள் கூறிவருகின்றன.
இதனையடுத்தே இன்சமாம் ராஜினாமா முடிவை எடுத்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் தனக்கு தொடர்பு இல்லை என்று இன்சமாம் தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகம் செய்தி செய்திவெளியிட்டுள்ளது.