கென்யாவில் வெடித்தது வன்முறை... இந்தியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்தது தூதரகம்

சாலையில் கென்யர்களின் போராட்டம்
சாலையில் கென்யர்களின் போராட்டம்

கிழக்கு ஆப்பிரிக்க தேசமான கென்யாவில் வன்முறை வெடித்ததை அடுத்து அங்கு பயணிக்கும் மற்றும் வசிக்கும் இந்தியர்களுக்கான முக்கிய எச்சரிக்கையை இந்திய தூதரகம் வழங்கியுள்ளது.

கென்யா நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய நிதி மசோதாவை நிறைவேற்றுவதற்கு எதிராக மூண்ட போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்துள்ளது. சர்ச்சை நிதி மசோதாவுக்கு எதிராக வாக்களிக்குமாறு தங்கள் எம்பிக்களை வலியுறுத்தி இளம் கென்யர்கள் சாலைகளில் இறங்கி போராடி வருகின்றனர். இதன் அங்கமாக கென்யாவின் நாடாளுமன்றத்தினுள் ஆயிரக்கணக்கானோர் நுழைய முயன்றதில், நாடாளுமன்ற வளாகத்தில் தீ வைப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறின.

போராட்டக்காரர்களுக்கு எதிரான கென்யா போலீஸாரின் நடவடிக்கையில் குறைந்தது 5 குடிமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அமெரிக்க முன்னாள் அதிபரான பராக் ஒபமாவின் சகோதரி முறை உறவினரான ஔமா பராக் என்பவர், போராட்ட களத்தில் கண்ணீர் புகை குண்டு வீச்சுக்கு ஆளானதில், கென்யா வன்முறை சர்வதேச கவனம் பெற்றது. பல்வேறு நாடுகளும் கென்யாவுக்கு பயணிக்கும் மற்றும் அங்கு வசிக்கும் தங்கள் குடிமக்களுக்கு முக்கிய எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றன.

இந்த வரிசையில் இந்திய தூதரகமும் முக்கிய எச்சரிக்கையை வழங்கியுள்ளது. "தற்போது நிலவும் பதட்டமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கென்யாவில் உள்ள அனைத்து இந்தியர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், அத்தியாவசியமற்ற நடமாட்டத்தை தவிர்க்கவும், நிலைமை சீராகும் வரை போராட்டங்கள் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அந்த அறிவிப்பில் கோரியுள்ளது.

மேலும் "உள்ளூர் செய்திகளை கவனிப்பதோடு, அரசின் அறிவுறுத்தல்களை பின்பற்ற உரிய சமூக ஊடக கணக்குகளை பின்பற்றுமாறும்” அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைரோபியில் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களில், 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதில் கென்யர்களின் போராட்டம் மேலும் ஆவேசம் அடைந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in