இந்திய பெண்கள் அணி 367 ரன்கள் முன்னிலை; தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் அபாரம்!

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 367 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்றைய போட்டியின் முதல் இன்னிங்ஸில் 606 ரன்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்தது இந்திய பெண்கள் அணி.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டிகள், ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. ஏற்கெனவே ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்திருந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நேற்று துவங்கியது.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் சிறப்பான துவக்கம் அளித்தனர். துவக்கம் முதலே தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு இருவரும் தெறிக்கவிட்டனர். இந்த சூழலில் ஸ்மிருதி மந்தனா 161 பந்துகளில் 26 பவுண்டரிகள், ஒரு சிக்சர் உட்பட 149 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அடுத்ததாக சுபா 15 ரன்களில் அவுட் ஆனார்.தொடர்ந்து ஷபாலி வர்மா 197 பந்துகளில், 23 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் உட்பட 205 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆனார். இதன் மூலம் அதிவேக இரட்டை சதம் அடித்த முதல் டெஸ்ட் வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார்.

இதன் பின்னர் வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 55 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் (115 பந்துகளில் 69 ரன்கள்), ரிச்சா கோஷ் (90 பந்துகளில் 86 ரன்கள்) என எல்லோருமே அரைசதம் கடந்தனர். முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 525 ரன்கள் குவித்திருந்த இந்திய அணி, இரண்டாவது நாள் 114.2வது ஓவரில் 600 ரன்களைக் கடந்து, பெண்கள் கிரிக்கெட்டில் 600 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் அணி என்ற சரித்திரம் படைத்தது இந்தியா. இதனை தொடர்ந்து இந்தியா தனது இன்னிங்ஸை 603/6 என்ற கட்டத்தில் டிக்ளேர் செய்தது

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி

இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியில் லாரா வோல்வார்ட் 20 ரன்களிலும், ஆனக் போஸ்ச் 39 ரன்களிலும், சுனே லூஸ் 65 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதில் ஆனக் போஷ் ஒரு சிக்சர் மற்றும் 4 பவுன்டரிகளை விளாசி இருந்தார். இதன் மூலம் உலக அரங்கில் தென்னாப்பிரிக்கா பெண்கள் அணிக்காக முதல் சிக்சர் அடித்த வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார்.

இன்றைய ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்திருந்தது. மரிசேன் 69 ரன்களுடனும், கிளார்க் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் ஸ்னே ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய பெண்கள் அணி 367 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in