
இந்தியாவை ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் தாக்க உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ‘தேஜ்’ புயல் நண்பகலில் தீவிர புயலாக வலுப்பெற்று, பின்னர் நேற்றிரவு மிகத்தீவிர புயலாக வலுப்பெற்றது. அதைத்தொடர்ந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை அதி தீவிர புயலாக வலுவடைந்தது.
இந்த புயல் அடுத்த மூன்று தினங்களில் நகர்ந்து, வரும் 24ம் தேதி ஏமன் மற்றும் ஓமன் கடற்கரையை கடக்கக்கூடும் என்றும், அப்போது மணிக்கு 115 முதல் 125 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதே போல், நேற்று காலை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று நள்ளிரவு மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று காலை ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு தெற்கே நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகரும்.
பின்னர் வடக்கு - வடகிழக்கு திசையில் திரும்பி வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு வங்க கடலோரப்பகுதிகளை நோக்கி அடுத்த மூன்று தினங்களில் நகரக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ஹமூன் என பெயரிடப்பட்டுள்ளது.
2018-ம் ஆண்டுக்கு பிறகு ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் உருவாவது இதுவே முதல்முறை. ஹமூன் புயல் ஆந்திர மாநிலத்தை தாக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவற்றால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புயல் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள இடங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் வாசிக்கலாமே...
உஷார்... தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
பிரபல கால்பந்து ஜாம்பவான் ராபர்ட் சார்ல்டன் காலமானார்! ரசிகர்கள் இரங்கல்!
பரபரப்பு… அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!
அதிர்ச்சி... புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை!
அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி... வாக்குவாதத்தால் பரபரப்பு!