டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்... இந்தியா கூட்டணி இன்று தீவிர ஆலோசனை!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 233 இடங்கள் பெற்றுள்ள நிலையில் டெல்லியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்த்து இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களின் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி என்ற பெயரில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டன.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றிய நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 233 இடங்களை கைப்பற்றியுள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிவு
மக்களவைத் தேர்தல் முடிவு

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், நேற்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்பி- ராகுல் காந்தியிடம், ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்களைப் பெற, பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் (நிதிஷ்குமார்), தெலுங்கு தேசம் (சந்திரபாபு நாயுடு) உள்ளிட்டோரின் ஆதரவைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை (இன்று) நடைபெறுகிறது. அதில் இந்த கேள்விகள் குறித்து விவாதிக்கப்பட்டு, கூட்டணி தலைவர்களுடனான கருத்துகளுக்குப் பின்னர் இது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்பி- ராகுல் காந்தி
காங்கிரஸ் எம்பி- ராகுல் காந்தி

இதேபோல், இந்தியா கூட்டணியில் உள்ள மகாராஷ்டிராவின் சிவசேனா (உத்தவ் பிரிவு) கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவும், மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

எனவே, டெல்லியில் இன்று நடைபெற உள்ள இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக தலைமையிலான கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க சென்னையிலிருந்து இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் பெரும்பான்மையுடன் உள்ள பாஜகவும் ஆட்சி அமைக்க இன்று அமைச்சரவை கூட்டத்தை கூட்டி ஆலோசனைக் நடத்த உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in