80 இடங்களில் சோதனை… தமிழ்நாட்டில் 2-வது நாளாக தொடரும் ஐ.டி. ரெய்டு!

80 இடங்களில் சோதனை… தமிழ்நாட்டில் 2-வது நாளாக தொடரும் ஐ.டி. ரெய்டு!

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், அரசு ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வரும் அதிரடி சோதனை இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான சென்னை தியாகராயர் நகர், கீழ்ப்பாக்கம் வேப்பேரி, திருவண்ணாமலை அருணை கல்லூரி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் வந்த புகாரின் பேரில், 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே போல் பிரபல கட்டுமான நிறுவனங்களான அப்பாசாமி, காசா கிராண்ட் ஆகிய நிறுவனங்களிலும் சோதனை தொடர்கிறது.

பட்டினம்பாக்கம் சீனிவாசபுரத்தில் காசா கிராண்ட் கட்டுமான நிறுவன மனிதவள மேலாளர் தினகரன் வீட்டில் சோதனை தொடர்கிறது. திருவான்மியூர் L.B. ரோடு காசா கிராண்ட் தலைமை அலுவலகம், திருவான்மியூர் ராதாகிருஷ்ணன் நகர் மெயின் ரோடு காசா கிராண்ட் அலுவலகம், திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காசா கிராண்ட் நிறுவனத்தின் மற்றொரு அலுவலகம் என மூன்று அலுவலகங்களிலும் சோதனை தொடர்கிறது

அப்பாசாமி கட்டுமான நிறுவன உரிமையாளர் குடும்பத்திற்கு சொந்தமான தியாகராய நகரில் உள்ள இரண்டு ஹோட்டல்களில் சோதனை தொடர்கிறது. கரூர், கோவையிலும் வருமான வரி துறை ரெய்டு நடக்கிறது.

கோவை ராமநாதபுரம் பர்சன் குடியிருப்பில் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை செயலர் மீனா ஜெயக்குமார் வீட்டில் ரெய்டு நடக்கிறது. பீளமேடு பகுதியில் உள்ள ஷெபீல்டு டவர் என்ற நிறுவனத்திலும், சவுரிபாளையம் அருகே காசாகிரான்ட் அலுவலகத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொழிலதிபர், தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் தொடர்புடைய மயிலாப்பூர், போயஸ் கார்டன், மந்தைவெளி ஆகிய இடங்களிலும் உள்ள வீடு, அலுவலகங்களிலும் சோதனை தொடர்கிறது. விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள கோல்டன் மார்பில் உரிமையாளர் பிரேம்நாத் என்பவர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை செய்து வருகின்றனர்.

இதனிடையே, கிண்டி நெடுஞ்சாலைத்துறை கெஸ்ட் ஹவுஸில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது. கோட்டூர்புரத்தில் அப்பாசாமி கட்டுமான நிறுவன தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் என்கிற கிருஷ்ணகுமார் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்தது.

மேலும், அமைந்தகரை ஒப்பந்ததாரர் கமலாக்கர் ரெட்டி, பூக்கடை பகுதியில் வசிக்கும் ஒப்பந்ததாரர் ராஜசேகர் ஆகியோரின் வீடுகளில் நடைபெற்ற சோதனையும் நிறைவு பெற்றது. அதே நேரத்தில் 80 இடங்களில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in