கேரளாவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் குப்பை தொட்டியில் வீசிய லாட்டரி சீட்டுக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ளது.
கோட்டயம் மாவட்டம் மூலவட்டம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுனில் குமார் (53), சில நாட்களுக்கு முன்பு மாநில அரசின் 50:50 என்ற குலுக்கல் பரிசு திட்டத்தில் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கினார். அதற்கான முதல் பரிசு ரூ.1 கோடி.
கடந்த 18-ம் தேதி குலுக்கல் நடத்தப்பட்டு மறுநாள் பரிசு பெற்றவர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டது. இதனிடையே, சுனில்குமார், ‘தனக்கு அதிர்ஷ்டம் இல்லை... வழக்கம் போல இந்த லாட்டரி சீட்டுகளுக்கும் பரிசு தொகை கிடைக்காது என கருதி, விரக்தியில் லாட்டரி சீட்டை வீட்டில் இருந்த குப்பை தொட்டியில் வீசிவிட்டு, தன்னுடைய வேலையை கவனிக்க தொடங்கினார்.
ஆனாலும் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும் போதெல்லாம் லாட்டரி சீட்டு குறித்து யோசித்துக் கொண்டே இருந்த அவர், பின்னர் குப்பையில் இருந்து கிளறி வெளியே எடுத்து, பரிசு விழுந்துள்ளதா என்று பார்த்தார். அப்போது ஆட்டோர் ஓட்டுநர் சுனில் குமார் அதிர்ச்சியில் உறைந்தார்.
ஏனென்றால் அவர் குப்பை தொட்டியில் வீசிய அந்த லாட்டரி சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருந்தது. இதையடுத்து மகிழ்ச்சியான செய்தியை குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொண்ட அவர், பரிசுத்தொகையை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
ரூ.1 கோடியை வைத்து, அடமானத்தில் உள்ள வீட்டை மீட்டு, புதிய வீடு கட்ட உள்ளதாகவும், வாங்கிய கடன் அனைத்தையும் அடைக்க உள்ளதாகவும் சுனில்குமார் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.