
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்து மீண்டும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த முறை 200 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரும், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானிக்கு தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. 10 என்.எஸ்.ஜி கமாண்டோக்கள் உட்பட 55 பேர் அவருக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் முகேஷ் அம்பானிக்கு வந்த மெயில் ஒன்றில், 20 கோடி ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கொலை செய்துவிடுவோம் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
அந்த மின்னஞ்சலில், 20 கோடி ரூபாய் தராவிட்டால் உங்களைக் கொன்று விடுவோம், எங்களிடம் இந்தியாவின் தலைசிறந்த ஷூட்டர்கள் இருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து அம்பானி தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து போலீஸார் கொலை மிரட்டல் தொடர்பாக இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மிரட்டல் விடுத்த நபர் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் முகேஷ் அம்பானிக்கு மேலும் ஒரு கொலை மிரட்டல் மெயில் அனுப்பப்பட்டுள்ளது. அதில், எங்களின் முதல் மின்னஞ்சலுக்கு நீங்கள் பதில் அளிக்கவில்லை. அதனால் தற்போது தொகை ரூ.200 கோடியாக அதிகரித்துள்ளது. இப்போதும் பணம் தரவில்லை என்றால், மரணம் உறுதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் மும்பையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவின் பேரில் அம்பானிக்கு உயரதிகாரிகளைக் கொண்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.