2014 தேர்தலில் 8 தொகுதிகளில் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்ட திமுக - அப்போதே பயம் காட்டிய பாஜக கூட்டணி!

கருணாநிதி முக ஸ்டாலின்
கருணாநிதி முக ஸ்டாலின்

இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி 12 தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி 2ம் இடம் பிடித்துள்ளது. இதேபோல 2014ல் பாஜக கூட்டணி, திமுக கூட்டணியை 8 தொகுதிகளில் 3ம் இடத்துக்கு தள்ளிய சம்பவம் நடந்துள்ளது.

நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கட்சியானது திருவள்ளூர், தென்சென்னை, மத்திய சென்னை, நீலகிரி, கோவை, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 8 தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி 2ம் இடம் இடம் பிடித்துள்ளது. பாஜக சின்னத்தில் போட்டியிட்ட புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம் வேலூரில் இரண்டாம் இடம் பிடித்தார். இதேபோல தேனியில் அமமுக, தருமபுரியில் பாமக, ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். கன்னியாகுமரியில் அதிமுகவை 4ம் இடத்துக்குத் தள்ளி நாம் தமிழர் கட்சி 3ம் இடம் பிடித்துள்ளது.

தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இந்த தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெற்றிபெறாதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த கட்சி 12 தொகுதிகளில் 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டது இன்னும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி - அண்ணாமலை
எடப்பாடி பழனிசாமி - அண்ணாமலை

தமிழக அரசியலில் இதேபோன்ற ஒரு சூழ்நிலை 2014 மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஏற்பட்டது. அப்போது அதிமுக தனித்து 39 தொகுதிகளிலும் போட்டியிட்டது. திமுக கூட்டணியில் விசிக, புதிய தமிழகம், மமக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் இணைந்துப் போட்டியிட்டன. பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக,மதிமுக, கொமதேக, புதியநீதிக்கட்சி, ஐஜேகே ஆகிய கட்சிகள் இணைந்திருந்தன. காங்கிரஸ் கட்சி 39 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது. கம்யூனிஸ்ட்டு கட்சிகள் தனித்து 17 தொகுதிகளில் களமிறங்கின.

இந்த தேர்தலில் 37 தொகுதிகளில் அதிமுக அமோக வெற்றிபெற்றது. பாஜக கன்னியாகுமரியிலும், அதன் கூட்டணி கட்சியான பாமக தருமபுரியிலும் வென்றது. திமுக கூட்டணி அந்த தேர்தலில் படுதோல்வியடைந்தது.

ஜெயலலிதா
ஜெயலலிதா

2014 தேர்தலில் வேலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் செங்குட்டுவன் வெற்றிபெற்றார், அடுத்த இடத்தை பாஜக கூட்டணியின் ஏ.சி.சண்முகம் பிடித்தார். தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வெற்றிபெற்றார், அடுத்த இடத்தை அதிமுகவின் மோகன் பிடித்தார். ஈரோடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் செல்வகுமர சின்னையன் வெற்றிபெற்றார், அடுத்த இடத்தை மதிமுகவின் கணேசமூர்த்தி பிடித்தார். திருப்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்யபாமா வெற்றிபெற்றார், அடுத்த இடத்தை தேமுதிகவின் தினேஷ்குமார் பிடித்தார்.

கோவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாகராஜன் வெற்றிபெற்றார், அடுத்த இடத்தை பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் பிடித்தார். பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் மகேந்திரன் வெற்றிபெற்றார், அடுத்த இடத்தை பாஜக கூட்டணியின் கொமதேக வேட்பாளர் ஈஸ்வரன் பிடித்தார். விருதுநகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார், அடுத்த இடத்தை மதிமுகவின் வைகோ பிடித்தார். கன்னியாகுமரியில் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார். 2ம் இடத்தை காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரும், 3ம் இடத்தை அதிமுகவும், நான்காம் இடத்தை திமுகவும் பிடித்தது. இப்படி 7 தொகுதிகளில் 3ம் இடமும், ஒரு தொகுதியில் 4ம் இடமும் பிடித்திருந்தது திமுக.

கருணாநிதி முக ஸ்டாலின்
கருணாநிதி முக ஸ்டாலின்

2014 தேர்தலில் அதிமுக 44.92 சதவீத வாக்குகளைப் பெற்றது. திமுக கூட்டணி 27.18 சதவீத வாக்குகளையும், பாஜக கூட்டணி 18.80 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 4.37 சதவீத வாக்குகளையும், கம்யூனிஸ்ட் கட்சிகள் 1.10 சதவீத வாக்குகளையும் பெற்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in