ஒரு கடையை மூடினால் மற்றொரு கடையில் வாங்கி குடிக்கிறார்கள் - அமைச்சர் முத்துசாமி ஆதங்கம்

அமைச்சர் முத்துசாமி
அமைச்சர் முத்துசாமி

படிப்படியாக மதுக்கடைகளை குறைத்தும், குடிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. ஒரு கடையை மூடினால் மற்றொரு கடையில் வாங்கி குடிக்கிறார்கள் என தமிழக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937 ஐ திருத்தம் செய்யும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். குற்றத்துக்காக பயன்படுத்தப்படும் அசையும், அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் மது
டாஸ்மாக் மது

இந்த நிலையில், சட்டப்பேரவையில் பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி மணி, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, "தமிழகத்தில் பூரண மதுவிலக்கை உடனே கொண்டு வர முடியுமா என்பதனை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். பூரண மதுவிலக்கு கொண்டுவருவதில் அரசுக்கும் விருப்பம் உள்ளது. ஆனால், தற்போது அதற்கான சூழல் இல்லை. படிப்படியாக மதுக்கடைகளைக் குறைக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம்.

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை

படிப்படியாக மதுக்கடைகளை குறைத்தும், குடிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. ஒரு கடையை மூடினால் மற்றொரு கடையில் வாங்கி குடிக்கிறார்கள். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தினால், அண்டை மாநிலங்களிலிருந்து மது உள்ளே வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது" என அவர் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in