குடகு மாவட்டத்தில் கனமழை: கர்நாடகாவில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை

கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து குடகு மாவட்டம் உள்ளிட்ட காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை இம்மாத துவக்கத்தில் தொடங்கியது. 3 வாரங்கள் கடந்து தற்போது பருவ மழை தீவிரமடைந்துள்ளது.

குறிப்பாக கடலோர மாவட்டங்களான உடுப்பி, குடகு, சிக்கமகளூரு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மாவட்டப் பகுதிகள் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக உள்ளன.

கிருஷ்ணராஜசாகர் அணை
கிருஷ்ணராஜசாகர் அணை

இப்பகுதிகளில் பெய்யும் மழை நீர் தான் காவிரி நதிக்கு வரும் நீராகும். இந்நிலையில் கனமழை எதிரொலியாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. குடகு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணையில் நேற்று 2241 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 3856 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதேபோல் தமிழகத்துக்கு நேரடியாக தண்ணீர் திறக்கப்படும் கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கேரள மாநிலம், வயநாடு மற்றும் கர்நாடகா மாநில எல்லைப் பகுதிகளிலிருந்து பெய்யும் மழைநீரானது கபினி அணைக்கு வருகிறது. இப்பகுதிகளிலும் பலத்த மழை காரணமாக கபினி அணைக்கு நேற்று 6 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, ஒரே நாளில் 16,927 கன அடியாக அதிகரித்துள்ளது.

கபினி அணை
கபினி அணை

கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளின் நீர்மட்டம் சுமார் 20 ஆயிரம் கன அடியை நெருங்கியுள்ளது. அடுத்து வரும் 7 நாள்களுக்கு இப்பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in