கோவை, நீலகிரியில் வெளுத்து வாங்கும் மழை... அணை நிரம்பியதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

பில்லூர் அணை
பில்லூர் அணை
Updated on
2 min read

கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு பில்லூர் அணை நிரம்பியுள்ளதால், பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மற்றும் நீலகிரி உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் வருகிற ஜூலை 2-ம் தேதி வரை மிதமானது முதல் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனிடையே தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

பில்லூர் அணை
பில்லூர் அணை

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் பில்லூர் அணை, 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 100 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 97 அடியாக உள்ளது. பில்லூர் அணைக்கு 14 ஆயிரம் கன அடி நீர் வருகை தந்து கொண்டிருப்பதால், அணையின் பாதுகாப்பு கருதி பவானி ஆற்றில 14 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பவானி ஆற்றங்கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உக்கடம் பெரியகுளம் நிரம்பியுள்ள காட்சி
உக்கடம் பெரியகுளம் நிரம்பியுள்ள காட்சி

பொதுமக்கள் நீர் நிலைகளில் குளிக்கவும், துணி துவைக்கவும் இறங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே தொடர் மழை காரணமாக கோவையில் உள்ள உக்கடம் பெரிய குளம், குனியமுத்தூர் குளம் உள்ளிட்ட குளங்கள் அடுத்தடுத்து நிரம்பி வருவதால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பந்தலூர், கூடலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டாவது நாளாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in