
தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாகவும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும்ஸ, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி,தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம், மயிலாடி, அஞ்சுகிராமம், கொட்டாரம், தோவாளை, திட்டுவிளை, மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.