அமீர்கான் மகனின் திரைப்படம் மீதான இடைக்காலத் தடை... குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மகன் ஜூனைத் கானுடன் அமீர்கான்
மகன் ஜூனைத் கானுடன் அமீர்கான்

பாலிவுட்டின் பிரபல நடிகர்களில் ஒருவரான அமீர்கானின் மகன் ஜூனைத்கான் நடித்த ’மகராஜ்’ திரைப்படத்துக்கு, நெட்ஃபிக்ளிஸ் தளத்தில் வெளியாக விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை விலக்கி குஜராத் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

மகராஜ் திரைப்படம் 1862-ம் ஆண்டு நடந்த ’மகாராஜ் அவதூறு வழக்கின்’ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்றும் எந்தவொரு தனிப்பட்ட சமூகத்தின் உணர்வுகளையும் மகராஜ் பாதிக்கவில்லை எனவும் கருத்து தெரிவித்திருக்கும் குஜராத் உயர் நீதிமன்றம், மகராஜ் திரைப்படத்துக்கான இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டது.

மகராஜ்; அசலும் - நகலும்
மகராஜ்; அசலும் - நகலும்

முன்னதாக ஜூன் 13-ம் தேதி படத்தை வெளியிட தடை விதித்திருந்த நீதிபதி சங்கீதா கே விஷேன், மகராஜ் படத்தைப் பார்த்த பிறகு நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் அதன் வெளியிடலுக்கு அனுமதி வழங்கினார். வைஷ்ணவ சமூகத்தின் மத உணர்வுகளை புண்படுத்தும் சாத்தியம் இருப்பதாக, குறிப்பிட்ட தரப்பினர் குழு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததையடுத்து, நெட்ஃபிளிக்ஸ் படத்தை ஸ்ட்ரீமிங் செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் ஜூன் 14 அன்று ரிலீஸ் ஆக இருந்த மகராஜ் படம் நிறுத்தி வைக்கப்பட்டது.

மகராஜ் திரைப்படம், 2013-ம் ஆண்டு வெளியான குஜராத்தி எழுத்தாளர் சௌரப் ஷாவின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. முன்னணி வைஷ்ணவ பிரமுகரான ஜாதுநாத்ஜி, சமூக சீர்திருத்தவாதி கர்சந்தாஸ் முல்ஜிக்கு எதிராக பதிவு செய்தார். முல்ஜி தனது பத்திரிகையான தி சத்யபிரகாஷ் மூலம் சுரண்டல் நடைமுறையை அம்பலப்படுத்தியது, அவதூறு வழக்குக்கு வழிவகுத்தது; அதுவே பிற்பாடு புகழ்பெற்ற மகாராஜ் அவதூறு வழக்காக மாறியது.

நெட்ஃபிளிஸ் தளத்தில் மகராஜ்
நெட்ஃபிளிஸ் தளத்தில் மகராஜ்

இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு உருவான மகராஜ் திரைப்படம், வைஷ்ணவ சமூகத்தை இழிவுபடுத்துகிறது என்று மனுதாரர்கள் முன்வைத்த முதன்மைக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என நீதிபதி கூறினார். “இதனால், மனுதாரர்களின் அச்சம் யூகங்களின் அடிப்படையிலானது என்ற முடிவுக்கு வர வாய்ப்பாகி உள்ளது. படம் இன்னும் மக்கள் பார்வைக்கு வெளியிடப்படாமல் இருப்பதால், வெறும் அனுமானத்தின் பேரில், அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்தை குறைக்க முடியாது”எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. இதனையடுத்து ஜூனைத்கான் நடித்த மகராஜ் திரைப்படம் உடனடியாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in