சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலுக்கு பாத்தியப்பட்ட விவசாய நிலம், கிழவன் கண்மாய் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இளவட்ட மஞ்சுவிரட்டு சென்ற ஆண்டு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த வருடமும் இன்று இளவட்ட மஞ்சுவிரட்டு நடத்தப்படும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியது.
அதை தொடர்ந்து சிங்கம்புணரியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் சிவகங்கை தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் விவசாய நிலத்தில் இரண்டு சமுதாய மக்கள் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு கோயிலுக்கு சொந்தமான 70 ஏக்கர் நிலத்தில் அந்த விவசாயிகள் சோளம், நிலக்கடலை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் கோயிலுக்கு சொந்தமான பண்ணை விவசாய நிலத்தில் ஆகஸ்ட் 9-ல் இளவட்ட மஞ்சுவிரட்டு நடத்த சிலர் ஏற்பாடு செய்துள்ளனர். மஞ்சுவிரட்டு நடத்தினால் பயிர்கள் சேதமடையும், விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே அரசு அனுமதி பெறாமல் நடைபெறும் இந்த இளவட்ட மஞ்சுவிரட்டு நடத்த தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என மனு அளித்திருந்தார்.
இந்த மனு நீதியரசர்கள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரதசக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு அரசாணையில் இப்பகுதி இடம் பெறவில்லை, மஞ்சுவிரட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என்று தெரிவித்தார். போலீசார் தரப்பிலும் மஞ்சுவிரட்டுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்டு மனு மீது வேறு உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாகன ஒலி பெருக்கி மூலம் இளவட்ட மஞ்சுவிரட்டு நடைபெறாது என காவல் துறையினர் அறிவிப்பு செய்தனர். மேலும் ஊர் பொதுமக்கள் மற்றும் காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் பொய்யான தகவல்களை நம்பி மஞ்சு விரட்டுக்கு வர வேண்டாம் என சிங்கம்புணரி காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசின் உத்தரவை மீறி சிங்கம்புணரி பகுதிகளில் மஞ்சுவிரட்டு நடத்த முயற்சி செய்பவர்களின் மீதும், அரசு அனுமதி அளிக்கப்படாத மஞ்சுவிரட்டிற்கு காளைகளை அழைத்து வருபவர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் போலீசார் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
மேலும், மஞ்சுவிரட்டு நடத்தபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பகுதியை காவல் துறையினரின் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இதற்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.