
கூகுள் நிறுவனம் இந்தியாவில் நிலநடுக்க எச்சரிக்கை சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய நிலஅதிா்வு மையத்துடன் கலந்து ஆலோசித்து அதன்பிறகு இந்தியாவில் ‘ஆண்ட்ராய்டு நிலநடுக்க எச்சரிக்கை சேவை அமைப்பை’ அறிமுகப்படுத்தி உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
இதன்மூலம், இந்திய ஆண்ட்ராய்டு பயனா்கள் தங்கள் பகுதியில் நிலநடுக்கம் ஏற்படும் போது முன்னறிவிப்பு எச்சரிக்கையைப் பெறுவார்கள். மழை முன்னறிவிப்பு போன்று நிலநடுக்க முன்னறிவிப்பையும் பெற முடியும்.
நிலநடுக்கத்தின் தொடக்கத்தையே சென்சாா்கள் மூலம் கண்டறியும் வகையில் கூகுள் இதனை வடிவமைத்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி, அளவு போன்றவையும் கூகுள் சா்வா்கள் மதிப்பிடும்.
மேலும், வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடா்கள் குறித்து பயனுள்ள தகவலை பயனா்களுக்கு வழங்குவதற்காக தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக கூகுள் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் தொடங்கும் போது மக்களுக்கு முன்னெச்சரிக்கை வழங்கும் சேவை பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது அது இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.