விடிய, விடிய ஆட்டுச்சந்தை... பக்ரீத் பண்டிகையையொட்டி களைகட்டிய வியாபாரம்!

விடிய விடிய நடைபெற்ற வேப்பூர் ஆட்டுச்சந்தை
விடிய விடிய நடைபெற்ற வேப்பூர் ஆட்டுச்சந்தை
Updated on
2 min read

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு கடலூர் மாவட்டம், வேப்பூர் ஆட்டு சந்தையில் சுமார் 10 கோடி ரூபாய்க்கும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சுமார் 7 கோடி ரூபாய் வரைக்கும் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை வருகிற 17 மற்றும் 18-ம் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் ஆட்டு இறைச்சி வழங்கியும், பிரியாணி வழங்கியும் இஸ்லாமியர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆட்டுச் சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது.

செஞ்சி ஆட்டுச்சந்தை
செஞ்சி ஆட்டுச்சந்தை

வெள்ளாடு, குறும்பாடு, செம்மறி என பலதரப்பட்ட ஆடுகள் விற்பனை கடந்த சில நாட்களாக சூடு பிடித்திருந்தது. இந்நிலையில் வழக்கமாக பகல் வேளைகளில் கடலூர் மாவட்டம் வேப்பூரில் நடைபெறும் ஆட்டுச்சந்தை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று இரவு நடைபெற்றது. மாலை 5 மணி முதல் இன்று அதிகாலை 6 மணி வரையிலும் விடிய, விடிய நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ஆயிரக்கணக்கான ஆடுகளை விற்பனைக்காக விவசாயிகளும், வியாபாரிகளும் கொண்டு வந்திருந்தனர்.

இதனை சக வியாபாரிகள் மற்றும் இஸ்லாமியர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் சென்றனர். விடிய, விடிய நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை
சுமார் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ஒரு ஆடு ஐந்தாயிரம் ரூபாய் முதல் 37 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் பிரபலமாக உள்ள செஞ்சி வார ஆட்டுச்சந்தை இன்று காலை கூடியது. அதிகாலை முதலே ஏராளமான விவசாயிகள் கால்நடைகளுடன் சந்தைக்கு வந்திருந்தனர்.

இங்கும் சில மணி நேரத்தில் சுமார் 7 கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்று இருப்பதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளாடுகள் ஜோடி 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையிலும், குறும்பாடுகள் ஜோடி 20 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரையிலும், செம்மறி ஆடுகள் ஜோடி 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in