அம்பானியை வீழ்த்தி அதானி அதகளம்... மீண்டும் ஆசியாவின் பெரும் பணக்காரர் ஆனார்!

கௌதம் அதானி
கௌதம் அதானி

ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரர் என்ற பட்டத்தை முகேஷ் அம்பானியிடமிருந்து மீண்டும் தட்டிப் பறித்திருக்கிறார் கௌதம் அதானி.

ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் பட்டியலின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியை விஞ்சி, ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரர் என்ற பட்டத்தை இன்னொரு இந்தியக் கோடீஸ்வரரான கௌவுதம் அதானி மீண்டும் கவர்ந்துள்ளார். ஜூன் 1 மாலை நிலவரப்படி, அம்பானியின் 109 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் ஒப்பிடும்போது, ​​அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி 111 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முந்தியிருக்கிறார்.

முகேஷ் அம்பானி - கௌதம் அதானி
முகேஷ் அம்பானி - கௌதம் அதானி

கடந்த சில தினங்களாக அதானி குழுமத்தின் பங்குகளின் குறிப்பிடத்தக்க உயர்வு, அம்பானியை அதானி முந்தியதற்கு முக்கிய காரணியாக மாறியுள்ளது. அதிலும், அதானி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களின் பங்குகளும், அடுத்த பத்தாண்டுகளில் குழுமத்தின் தீவிரமான விரிவாக்கத் திட்டங்களை எடுத்துக்காட்டும் ஜெஃபரீஸ் அறிக்கையைத் தொடர்ந்து நேற்று விமரிசையாக உயர்ந்தன.

அதானி குழுமத்தின் பங்குகள் முதலீட்டாளர்களின் செல்வத்தில் ரூ1.23 லட்சம் கோடி வரை சேர்த்ததன் மூலம் சந்தை நேர்மறையான எதிர்வினையை ஏற்படுத்தியது. வர்த்தகத்தின் முடிவில், சந்தை மூலதனம் ரூ84,064 கோடி மதிப்புடன் ரூ.17.51 ​​லட்சம் கோடியாக எகிறி இருந்தது .

மேற்படி எழுச்சியை ஊகித்தது போன்று இந்த வாரத்தின் தொடக்கத்தில், அதானி குழுமத்தின் எதிர்காலம் குறித்து கௌதம் அதானி நம்பிக்கை தெரிவித்து இருந்தார். அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கையை அடுத்து அதானி குழுமத்தின் பங்குகள் விழுந்ததும் பின்னர் சுதாரித்து எழுந்ததும் இந்திய பங்குச்சந்தையில் வரலாற்று சாதனையாக அமைந்தன.

அதானி - மோடி
அதானி - மோடி

"முன்னோக்கிச் செல்லும் பாதை அசாதாரணமான சாத்தியக்கூறுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதானி குழுமம் இதுவரை இருந்ததை விட இன்று வலுவாக உள்ளது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்" என்றும் அப்போது கௌதம் அதானி உறுதி கூறினார்.

மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக மூன்றாம் முறையாக ஆட்சியமைக்கும் என்று, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இன்று மாலை உறுதி செய்தபோது, அதானி நிறுவனத்தின் சாதனை எழுச்சி குறித்தான ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர் பட்டியல் தரவும் பொருத்தமாக வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in